திமுக அரசு பதவியேற்ற பிறகு, அறிவைப் பெருக்கும் வகையில் நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குவதிலும் ஆங்காங்கே புத்தக காட்சியை நடத்துவதிலும் ஆர்வம் காட்டிவருகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்த புத்தக காட்சிக்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களும், இளைஞர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் புத்தக திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இவ்விழா பெருந்திரள் வாசிப்பு நிகழ்வாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர், ‘பொதுமக்கள் புத்தக திருவிழாவினை குடும்பத்துடன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பதனால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்களை வாசிப்பதால் நல்ல பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள முடியும்’ என்றார். அமைச்சர்கள் பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் புத்தக திருவிழா வரும் 25ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.