புதிதாக உருமாற்றம் அடைந்திருக்கும் கொரோனா வைரஸால், இன்னும் மக்கள் அச்சத்திலேயே உறைந்துள்ளனர். கொரோனா தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால் அதை முழுமையாக அழிக்கமுடியாத சூழலே நிலவுகிறது. என்றாலும், அதைத் தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வாக இருக்கிறது. இந்த நிலையில், உலக நாடுகள் பலவற்றில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் வேகம் பிடித்துள்ளது. குறிப்பாக, சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உருமாறிய ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் மட்டுமல்லாது, பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் வேகம் பிடிக்கிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது என்றாலும், தலைநகர் டெல்லி மற்றும் ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் கொரோன பரவல் சற்று அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, டெல்லியில் கடந்த 10ம் தேதி மட்டும் 141 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு, இன்று 461 ஆக உயர்ந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியில் தினசரி பாதிப்பு விகிதமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அங்கு, தொற்று பாதிப்பு விகிதம் 5.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 42 ஆயிரத்து 97 ஆக உயர்ந்துள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 4 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.