day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நிலம் மீட்டுத்தந்த போராளி கிருஷ்ணம்மாள்

நிலம் மீட்டுத்தந்த போராளி கிருஷ்ணம்மாள்

பத்மபூஷன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். 93 வயது நிரம்பிய பின்னாலும் இன்னும் வேலை நிறைய இருக்கிறது என்று சொல்லும் சமூகப் போராளி. நிலமற்றவர்களுக்கு நிலம் பெற்றுத் தந்து சாதனை பல புரிந்த மனிதநேய சிகரம். வாழ்க்கையையே சமூகத்திற்காக அர்ப்பணித்துவிட்ட கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தன் வாழ்வின் முக்கியமான தருணங்களை ‘பெண்களின் குரல்’ இதழுக்காகப்  பகிர்ந்துகொள்கிறார்:

“ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் நான். அய்யன்கோட்டை என்ற கிராமத்தில் பள்ளிகளில் ஏழாவது வரைக்கும்தான் இருந்தது. எனக்கு மேலும் படிக்க ஆசை. அந்தக் காலத்தில் பெண்களை மேலே படிக்க வெளியூர் அனுப்ப மாட்டார்கள். என் அண்ணன் மதுரையில் படித்துக்கொண்டு இருந்தார். என்னையும் அங்கே அழைத்துப் போகச் சொன்னேன். ஆங்கிலம் குறைபாடு என்று கூறி ஐந்தாவது வகுப்பில் சேர்த்துக்கொள்ளத் தயார் ஆனார்கள். அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு ஒரு தலைமை ஆசிரியை தன் வீட்டிலேயே வைத்து எனக்குச் சாப்பாடு போட்டு எனக்குக் கல்வி புகட்டினார். ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். நான் எட்டாவதும் தேறினேன்.

அதற்குப் பிறகு டி.வி.சுந்தரம் அய்யங்காரின் மகள் டாக்டர் சௌந்தரமிடம் என்னை விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அங்கு பல ஏழைப் பெண்கள் இருந்தார்கள். டாக்டர் சௌந்தரம் இரவு பத்து மணிவரை எங்களுக்கு வீணை வாசித்துக் காட்டுவார்கள். அவர்கள் காரில் போகும்போது என்னையும் அழைத்துப் போவார்கள். இரவு இரண்டு பேரும் மதுரை வீதிகளில் சுற்றுவோம். இளம் விதவைகளை நாங்கள் கண்டறிவோம். இளம் வயதில் கணவரை இழந்து அவதிப்பட்டவர்களை அடையாளம் காண்போம். அவர்களில் சிலர் வீதிகளிலேயே நிற்பார்கள். அவர்களைக் காரில் ஏற்றிக்கொண்டு போவோம். அவர்களைப்  பெண்கள் காப்பகத்தில் விட்டுவிட்டு நாங்கள் வீடு திரும்பும்போது நள்ளிரவு கடந்துவிடும். டாக்டர் சௌந்தரமும் இளம் வயதில் திருமணம் ஆகி விதவை ஆனவர்தான். அந்தப் பெண்களைப் பார்க்கும்போது எங்களுக்கு மனம் உருகிப் போகும். ஒரு காலத்தில் இவர்களுக்காக நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று நான் உறுதி பூண்டேன்.

கல்லூரி எல்லாம் முடித்த பின்னால் டாக்டர் சௌந்தரம் உருவாக்கிய காந்தி கிராமம் சென்றேன். அங்கு இளம் விதவைகள் 52 பேரை சேர்த்து விட்டேன். அவர்களுக்குக் கல்வி கொடுத்தோம்.  அந்தக் காலத்தில் நான்காவது படித்தால் நர்சு வேலை கிடைக்கும். அதற்கு அவர்களைத் தயார் செய்தோம்.

பிஏ படித்த பிறகு நான் பிஎட் படித்தேன். அதன் பின்னால் வினோபா பாவேயின் பூமிதான  இயக்கத்தில்  சேர்ந்துவிட்டேன். பிறகு தமிழ்நாட்டிற்கு வந்த நான் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிலம் வாங்கித் தரும் இயக்கத்தைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறேன்.

அந்தக் காலம். காமராஜர் ஆட்சிக் காலம். அவர் எனக்கு கல்வித் துறை ஆய்வாளர் பணி கொடுக்க ஆணை வழங்கினார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அதைக் கிழித்துப் போட்டுவிட்டேன். சமூகப் பணிதான் எனக்கு முக்கியமானதாக இருந்தது.

கீழ்வெண்மணி சம்பவம் என்னை உலுக்கிவிட்டது. அதில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.  இதில் 16 பேர் பெண்கள். 23 குழந்தைகள். ஐந்து முதிய ஆண்கள். அந்த சம்பவம் நடக்கும்போது நான் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தேன். இரவு முழுவதும் உறங்கவில்லை. காலை பத்திரிகையில் 44 பேர் எரிக்கப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது. அது மட்டும் நடக்கவில்லை. ஆண்களை முழங்காலால் காவல் நிலையம் வரை நடத்திக் கொண்டு போனார்கள். உடனே அங்கே நான் போனேன்.

அப்போது நான் ஒரு விரதம் இருந்தேன். காலில் செருப்பு அணியாமல் இருக்க முடிவு செய்தேன். பகல் நேரத்தில் உண்ணக் கூடாது என்று உறுதி பூண்டேன். ஒரு டம்ளர் நீராகாராம், நான்கு வாழைப்பழம். இதுதான் அந்தக் காலத்தில் எனக்கு உணவு. இப்படி மூன்று ஆண்டுகள் கழிந்தன. ஏதாவது குடிசையில் போய் விழுந்தால் அவர்கள் சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவேன்.    அவ்வளவுதான்.    அப்படியே படுத்துவிடுவேன்.

அங்கேயே இருந்து நிலமற்ற உழவர்களுக்கு நிலம் கிடைக்கப் போராடினேன். அவர்களுக்கு வீடு எல்லாம் கட்டிக் கொடுக்க முயற்சி செய்தேன். அவர்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வர பாடுபட்டேன். போராட்டம் நடத்தினேன். சிறையில் அடைத்தார்கள். பத்து பேர் இருக்க வேண்டிய அறையில் முப்பது பேரை அடைப்பார்கள். பத்து பேர் நிற்போம். பத்து பேர் உட்காருவோம். இப்படி சிரமம் அனுபவித்தோம். இப்போது அது பெரிதாகத் தெரியவில்லை.

இன்றும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. தொடர்ந்து வேலை செய்யாவிட்டால் முடியாது. இரவு பகலாக வேலை செய்தால்தான் முடியும்.  இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காலால் மிதித்துத் தள்ளலாம் என்றுதான் இருக்கிறார்கள். அவர்கள் எழ வேண்டும் என்ற உணர்ச்சி வேண்டும். அவர்களால் எழ முடியாது. நாம்தான் கையைப் பிடித்து தூக்கி வர வேண்டும்.

என் பணி மிகவும் கடினமானது என்று என் கணவர் அந்தக் காலத்தில் கூறுவார். இரண்டு குழந்தைகள் இருக்கும்போது அவர்களுக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்ற கவலையை எனக்கு அவர் ஊட்டினார். மகனை கோவையில் ராமகிருஷ்ணா வித்யாலயாவிலும், மகளை ஈரோட்டிலும் விட்டுவிட்டேன். அவர்கள் நன்றாகப் படித்து மேலே வந்துவிட்டார்கள்.

நான் என் பணியைத் தொடர்ந்தேன். ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து வாழ்வு தந்தேன். அவர்களின் குழந்தைகள் தங்கிப் படிக்க இரண்டு விடுதிகள் அமைத்திருக்கிறேன். மன நிறைவாக இருக்கிறேன் நான்.

எனக்கு ஒரு முக்கியமான கடமை உண்டு. அது குடியை நிறுத்துவது. ஒடுக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். அதை நிறுத்தும் வரை அவர்களால் சொந்தமாக வீட்டைக் கட்ட முடியாது.

ஒடுக்கப்பட்டவர்கள் கோயில் நிலங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடு கிடைக்க ஒரு வழி செய்தால் என் பணி முடிந்தது என்று பொருள். முதல்வரைப் பார்த்தால் வேலை நடக்கும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளைச் செய்வேன். டெல்லி சென்று பிரதமர் மோடியைப் பார்த்து இவர்களுக்கு வீட்டு மனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

எனக்கு அரசியல் பிடிக்கவில்லை. எந்தக் கட்சியிலும் நான் சேர மாட்டேன். அரசியலில் சேர்ந்தால் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். மன வருத்தம் வரும். சண்டை வரும். அது தேவையில்லை. பல்வேறு கட்சிகளில் இருந்த பெண்கள் என்னுடன் வந்துவிட்டார்கள். உண்மையில் நான் யாருக்கும் ஓட்டுப் போட்டதில்லை.

கருணாநிதி ஆட்சி இருந்தபோது அவரிடம் சுமார் 35 பேருக்கு வீடு வேண்டும் என்று கூறினேன். அதற்கான ஏற்பாடுகளை அப்போதைய அரசு செய்ய முனைந்தது. ஒரு நாள் வீட்டுமனைகளை அளந்துகொடுக்க தாசில்தார் வர இருந்தார். நில உரிமையாளர் குடிசைகளைப் பிரித்து தன் பங்களாவில் அடுக்கி வைத்துக்கொண்டார். தாசில்தார் வந்து பார்த்தபோது அங்கு வீடுகள் இல்லை, யாரும் குடியிருக்கவில்லை என்று காட்டப்பட்டது. பத்து, பதினைந்து எருமை மாடுகள்தான் அங்கே கட்டப்பட்டிருந்தன. வைக்கோல் எல்லாம் அங்கே போடப்பட்டது. நான் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தேன். யாருக்கும் தெரியாமல் எல்லோரும் உறங்கிய பின்னால் இரவு பத்து மணிக்கு மேல் ஒரு மேல்நாட்டுப் பெண்ணுடன் அங்கே சென்றேன். மூன்று கிலோமீட்டர் நடந்தே போனோம். மாட்டுக் கொட்டகையில் நாங்கள் படுத்துக்கொண்டோம். வெட்டிக் கொன்றுவிடக் கூட வாய்ப்பு இருந்த நள்ளிரவு அது. ஆனால் வாய் பேசாமல் நாங்கள் படுத்துக் கிடந்தோம். ஆனால் எதற்கும் பயப்படாமல் இருக்க முடிவு செய்தோம். இதில் வென்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மனை வாங்கிக் கொடுத்து வீடு கட்டிக் கொடுத்துவிட முடியும் என்று நம்பினேன். ஆனால் கோழி கூவியதும் என்னால் கட்டுப்படுத்திக்கொண்டு  படுக்க முடியவில்லை. எழுந்து கத்தினேன். யார் யார் கையில் அரிவாள் இருக்கிறதோ, அவர்கள் வந்து வெட்டலாம் வா என்று பெரிய சப்தம் போட்டேன். தடி வைத்துகொண்டவன் வரலாம், நான் உன் முன்னால்தான் நிற்கிறேன் வா என்று கூப்பாடு போட்டேன். அவ்வளவுதான், அவர்கள் எல்லோரும் ஓட்டம் எடுத்துவிட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கள் சப்தம் கேட்டு ஓடி வந்துவிட்டார்கள். எங்கள் அம்மாவை அடிக்கப் போவதா என்று அவர்கள் பாதுகாப்புக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்கு நாம் சவால் விடக்கூடாது என்று கூறினேன். என்ன கையில் கிடைக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு இரவுக்குள் நாம் 35 வீடுகள் கட்டிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் ஒரு ஆலமரத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அவர்கள் வீடு கட்டி உள்ளே போன பின்னால்தான் நான் கீழே இறங்கினேன். எதற்கும் நான் பயப்பட்டதில்லை.

காந்தியின் சித்தாந்தமே, ‘செய் அல்லது செத்து மடி’ என்பதுதானே. அதை நான் பின்பற்றினேன்.

ஒவ்வொரு நிலச்சுவான் தாரரிடமும் அவர்களுக்குத் தகுந்தபடி பேசி உழுபவர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுத்து வீடு அமைத்துக் கொடுத்தேன்.

சமீபத்திய புயலில் வீடுகள் எல்லாம் சேதம் ஆகிவிட்டன. மீண்டும் அவற்றை உருவாக்க முயன்றுவருகிறோம்.

மூன்று நாளைக்கு முன்னால் நான் அங்கு போயிருந்தேன். ஒரு பெரியவர் என்னை, என் தாயே வாம்மா என்று அழைத்து 23 மூட்டை நெல் கொடுத்தார். அதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

என் பணியில் நான் நிறையச் சாதித்துவிட்டேன். என்னைப் போன்ற பெண்கள் நிறைய வர வேண்டும் என்று நினைத்தேன். அதில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறேன். நினைத்ததை முடித்திருக் கிறேன். அதுவே என் வாழ்வின் வெற்றி.

தொட்டதெல்லாம் விருத்தி அடைந்திருக்கிறது. அதுவே போதும்”.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!