மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும் கோயிலாக இருப்பது சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி கோயில். பெருமாளின் 108 திவ்யதேசங்களில், இது 61வது திவ்யதேசமாக இருக்கிறது. இத்திருக்கோயிலுக்கு எதிரே திருக்குளம் காணப்படுகிறது. இது, கங்கையைவிட புனிதமானது என்கின்றன புராணங்கள். மேலும், இத்திருக்குளத்தில் ஐந்து புனித தீர்த்தங்களும் அடங்கியிருப்பதாக தெரிவிக்கின்றன. புராண காலத்தில் இத்தலம் பிருந்தாரண்ய க்ஷேத்ரம் என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்த கண்ணபிரானே, இங்கு கோயில் கொண்டிருப்பதால், பார்த்தசாரதி என இத்திருக்கோயிலில் நாமம் கொண்டார். இக்கோயிலில் இருக்கும் பெருமாளின் சிலை 9 அடி உயரம் கொண்டது. இப்பெருமாள் இங்கு, தன் குடும்பம் சகிதமாக இருக்கிறார். ஆளுமை திறன் மேம்படுவதற்காக பக்தர்கள் நாள்தோறும் இக்கோயிலுக்கு படையெடுக்கின்றனர். இந்த நிலையில் சித்திரை திருவிழா தமிழகம் முழுவதும் களைகட்டியிருக்கிறது. குறிப்பாக, இந்த கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெற இருக்கின்றன. வருகிற 18ம் தேதி கருடசேவை நிகழ்ச்சியும் 22ம் தேதி தேரோட்டமும் நடைபெற இருக்கிறது. இறுதியில் 25ம் தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற இருக்கிறது. இதையடுத்து பக்தர்கள் பெருமாளின் அருளைப் பெற வேண்டுமாய் கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.