இந்த வருடம் 109 ஆவது சர்வேதேச மகளிர் தின விழவைக் கொண்டாடி இருக்கிறோம். இந்த ஆண்டின் முழக்கமாக ஐ .நா. Generation Equality என்பதை முன்னிறுத்தி இருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் ஆண், பெண், நிறம், நாடு, வயது பாகுபாடின்றி அனைவரும் பெண்களின் சமத்துவத்திற்காகப் போராட வேண்டும் என்ற அறிவுரை வழங்கி இருக்கிறது.
இதைப் பற்றி சரியான புரிதலோடுதான் நாம் இருக்கிறோமா? பாரதி கண்ட புதுமைப் பெண் என்றுசொல்கிறார்கள். ஆனால் உண்மையில் எது பெண்ணுரிமை. ‘பெண் சமத்துவம்’ ஆடையில் ஆரம்பித்து நாம் அன்றாடம் செய்யும் அனைத்துப் பணிகளிலும் நாம் பெண்ணுரிமை என நினைத்து எதையோ செய்துகொண்டு இருக்கிறோம்.
பெண் உரிமை, பெண் சமத்துவம் என்பது வீட்டில் இருந்தே வரவேண்டும். ஒரு ஆண் செய்யும் அனைத்தையும் செய்யக்கூடிய உரிமை பெண்ணுக்கு உள்ளது. ஆனால் எதைச் செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை அவளே தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு உள்ளது. ஆண் மதுகுடிக்கிறான் என்றால் பெண்ணும் குடிக்கவேண்டும் என்பதல்ல சம உரிமை. அவன் குடிப்பதைத் தவறு என்றுசொல்லித் திருத்த வேண்டும். அதேபோல் வீட்டில் சமைப்பது,குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது இதில் ஆண்களுக்கும் சம பங்கு உள்ளது. அது பெண்களுக்கான பணி மட்டும்அல்ல என்பதுதான் சம உரிமை. இந்த சமுதாயத்தை ஆண்கள் மட்டுமே கட்டமைத்து இருக்கிறார்கள். நாம்சொல்வது பெண்களுக்கும் சம உரிமை வேண்டும்.குழந்தைகளைப் பெற்றெடுப்பது நீங்கள், அதனை வளர்ப்பதும் நீங்கள் என சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். பெண்கள் வளர்க்க வேண்டும் நிச்சயமாக. ஆனால் ஆண்களும் சேர்ந்து தான் வளர்க்க வேண்டும். என்பதுதான் எங்களின் வாதம்.உங்களுக்கும் சமமான பொறுப்பும், கடமையும் இருக்கிறது. அது ஏதோ பெண்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம்போல் ஆண்கள் இருக்கிறார்கள். இன்று ஐ.நா. குறிப்பிடுவது இதைத்தான். சமத்துவம் வேண்டும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமாக. அதற்குக் குரல் கொடுங்கள் என்கிறது.
இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். ஒரு குடும்பம். அப்பா அம்மா ஒரு குழந்தை. பையன் ரொம்ப துறு துறுன்னு இருக்குற பையன். ஒரு வீட்டில் பெரிய திருமண நிகழ்ச்சி. அன்று அனைவரும் ஒன்றாக இருக்கும் சூழலில் திடீரென வந்து தன் தாயிடம் அம்மா உச்சா வருது என்றான்.அவளுக்கு வெட்கமாகிவிட்டது. அவள் குழந்தையைஅழைத்து அனைவரின் முன்பும் இது போன்று சத்தமாகச் சொல்ல கூடாதுடா, அதற்கு பதில் உனக்கு ஒன்றுசொல்லி தருகிறேன், அப்படி சொல். நான் புரிந்துகொள்கிறேன் என்றாள். உனக்கு எப்பவாவது அவசரமா வந்தால் அம்மா பாட்டு பாடணும் போல இருக்குமான்னு சொல். நான் புரிந்து கொள்கிறேன் என்றாள். அவனும் சரி என்றான். அதே போல் அவனும் பலமுறை தன் தாயிடம் வந்துகூறுவான். அவளும் அழைத்துச் சென்றுவருவாள்.
ஒரு நாள் அவள் ஊருக்குச் சென்றிருந்த நேரம் அன்று அந்தப் பையன் தன் தந்தையுடன் இருந்தான். இரவு வேளை அவனுக்கு அவசரம். தாய் இல்லை. தந்தை உறங்கி கொண்டிருந்தார்.அப்பா எனக்குப் பாட்டு பாடணும் போல இருக்கு என்றான்.அவரோ எந்த நேரத்தில் என்ன சொல்ற, பாட்டு பாட ஒருநேரம் காலம் கிடையாதா என்றார். அவன் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்க, தந்தை இரவு நேரம் மெதுவா என் காதுல வந்து பாடு என்றார். அவனும் காதில் பாடிவிட்டான். இப்படித்தான் ஆகும் பெண்கள் மட்டுமே வீட்டில் குழந்தை வளர்ப்பு உட்பட அனைத்து வேலைகளையும் செய்யும்போது. என்றாவது ஒரு நாள் ஆண்களுக்கு இந்நிலைதான் ஏற்படும்.
பெண்கள் மட்டுமே வீட்டு வேலைகளைச் செய்யவேண்டும் என்பது அன்றய காலம். அது அடிமைப்படுத்திய நேரம். ஆண்கள் மட்டுமே பணிக்குச் செல்வது பெண்கள், வீட்டி இருந்து வீட்டுவேலைகளைப் பார்ப்பது. இன்று சூழல் மாறிவிட்டது ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் கல்லூரி வரை வந்து கல்வி பெறுகிறர்கள். பணிக்குச் செல்கிறார்கள். அனைத்து துறைகளிலும் வல்லுனர்களாகவும் திகழ்கின்றனர். எங்களை இன்னும் அடிமைப்படுத்த நினைக்கவேண்டாம். சமமாக கருதுங்கள். பெண்களைத் தென்றல், மலர் என்றெல்லாம் வர்ணித்தார்கள். இன்று சிங்கப் பெண் என்கிறார்கள். நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். எங்களைத் தென்றலாகவும் பார்க்க வேண்டாம், சீறும் சிங்கப் பெண்ணாகவும் போற்றவேண்டாம் பெண்களைப் பெண்களாக சமமாக வாழவிடுங்கள். அதுபோதும் என்பதுதான்,
பெண்ணைப் பற்றிப் பெண்கள் எழுதட்டும். கவிஞர் தாமரை போல இங்கு எல்லாம் ஆண் மனதில் இருப்பது தான் வெளிவருகிறது. பெண்ணைப் பற்றி, பெண்கள் எழுதவேண்டும். ஆண்கள் மனதில் இருப்பதைத் திணிக்கக்கூடாது. பெண்கள் சம்பந்தப் பட்ட திரைப்படமோ, விளம்பரமோ, பத்திரிகையோ அனைத்திலும் ஆணின் கருத்துக்களே பிரதிபலிக்கின்றன. பெண் வெறும்காட்சிப் பொருளாக மட்டுமே காட்டப்படுகிறாள். இது மாறவேண்டும். பெண்களை வைத்துப் படம் எடுப்பவர்கள் கண்ணியமாக நடக்கவேண்டும். அரைகுறை ஆடைகளை பெண்களுக்கு அணிவித்துக் காட்சிகள் எடுக்கக்கூடாது. அதுபோன்று எடுத்தால் பெண்கள் நாம் போராடவும் தயங்கக் கூடாது. பெண்கள் ஒன்றும் போகப் பொருள் அல்ல. பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். இன்று மிகப் பெரிய நடிகர்களின் அறிமுகக் காட்சிகளில் கூட பத்துபெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆட வேண்டியுள்ளது.பெண்கள் என்ன காட்சிப் பொருளா? அதுபோன்ற படங்களைப் புறக்கணிக்கவேண்டும்.
பெண்கள் அழகு, அழகுக்காக எனப் பெண்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கவேண்டாம். அழகையும் தாண்டி பெண்ணிடம் ஏராளமான ஆற்றல் உள்ளது. அதனை வெளிக்கொண்டு வாருங்கள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பியூட்டி பார்லர்கள். மகிழ்ச்சி. பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். ஆனால் கண்ணியமான உடை அணியுங்கள். சமத்துவம் சமத்துவம் என்று நம்முடைய உடைகளில் காட்டவேண்டிய அவசியம் கிடையாது . கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருவன் தன் தங்கையின் துப்பட்டா விலகியிருந்தால் அவன் பார்வை தவறாகப் போவது கிடையாது. அதே இன்னொரு பெண்ணின் துப்பட்டா விலகினால் அவனின் பார்வை தவறாகப் போகிறது. இது யார் தவறு? போடும் ஆடையிலா ? இல்லை, அவனின் பார்வையில் குற்றம். இது மிகவும் உண்மையான கருத்து.பிரைவேட் பார்ட் என்பது ஒன்று உள்ளது. அது ஆண்களுக்கும் பொருந்தும். பெண்களுக்கும் பொருந்தும். எதைக் காட்ட வேண்டுமோ அதைத் தான் காட்ட வேண்டும்.ஆடை அலங்காரத்தில் ஒரு கண்ணியம் வேண்டும்.எங்களுக்கு சுதந்திரம் இருக்கு என்று எதை வேண்டுமானாலும் செய்யக்கூடாது. மற்றவர் கண்கள் உறுத்தாத வகையில் ஆடைகள் அணியவேண்டும்.
அனைத்து பெண்களும் ஒரு நாள் தாய் ஆகப்போகிறீர்கள். உங்கள்குழந்தை உங்களைப் பார்த்துதான் கற்றுக்கொள்ளும். ஆகவே கவனமான ஆடை அலங்காரம் நம் அனைவருக்கும் அவசியம் . பொதுவாக பெண்களுக்கு செல்ப் சிம்பதி இருக்கும். தன்னிரக்கம்னு சொல்லுவோம். அதாவது தன்னை யாரும் கவனிப்பது இல்லை. தன் மீது யாருக்கும் அக்கறை இல்லை. அது போன்ற ஒரு உணர்வு இருக்கும்.
நமது வீட்டுச் சூழ்நிலை எப்படி இருக்கிறதோ ஆனால் நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம் .ஒன்றே ஒன்றுதான், நம்மால் சாதிக்க முடியும் என்ற துணிச்சலும் தைரியமும் உறுதியும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதுபோதும்.படித்த பெண்கள் பெரும்பாலும் வீட்டில்அடிவாங்குவது இல்லை. உலகம் முழுவதும் 35% பெண்கள் இன்னும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப் படுகிறார்கள். இப்போது சமூகவலையத்தளத்தில் பெண்களின் படங்களை முகநூலில் வைக்க வேண்டாம் எனசிலர் கூறுகிறார்கள். ஏன் என்றால் புகைப்படத்தை மார் பிங்செய்து வேறு ஒரு பெண்ணின் உடலுடன் பொருத்திவிடுவார்கள் எனச் சொல்கிறார்கள். செய்யட்டும், நமக்கென்ன?அதனால், இது போன்ற சம்பவங்களால் பெண்கள் பலர் இறந்திருக்கிறார்கள். நாம் மனஉறுதியோடு இருக்கவேண்டும்.
இன்று சமுதாயத்தில் ஒரு பெண்ணை ஒடுக்கவேண்டும் என்றால் பெண்கள் மீது அவர்கள் போடும் பழி அவள் நடத்தை பற்றி பேசுவது. அவளை அசிங்கப்படுத்தி ஒடுக்க நினைப்பது. இந்த சமுதாயத்தில் அணைத்துப் பட்டப்பெயர்களும் பெண்களுக்குத் தான். விலைமாது, விபச்சாரி எல்லாப்பெயர்களும். இங்கு ஆண்களுக்குப் பெயர்கள் கிடையாது. ஒரு பெண் ஒரு ஆணிடம் சென்றால் அவள்பெயர் விபச்சாரி. ஆனால் அவனுக்குப் பெயர் கிடையாது . நான் அவர்களை நியாயப்படுத்தக் கூறவில்லை. பெண்கள் துணிந்து கேள்விகேட்க வேண்டும். போராடவேண்டும். அதுதான் சமத்துவம்,பெண்ணுரிமை. அதை கேட்கும் துணிவு இளம் வயதில்தான் ஆரம்பிக்கும். அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும் . எனக்கும் இது உங்கள் வயதில் உருவான தாக்கம்தான்.
என்னுடைய 7 வயதில் தருமபுரி மாவட்டத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது பெண்குழந்தைக்கள் பிறந்தால் கள்ளிப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்தது. நான் பார்த்திருக்கிறேன். இதுதான், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்காக தொடர்ந்துபோராடவேண்டும் என்ற உந்துதலை எனக்கு ஏற்படுத்தியது . எனவே பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டுமே நமக்கான உரிமையை நாம் பெற முடியும். தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமவாய்ப்பை பெற வேண்டும். அரசியலுக்குப் பெண்கள் வர வேண் டும். அப்போது தான் பெண்களுக்கான திட்டங்களை , உரிமைகளை சட்டமாக நாம் பெற வழிவகை செய்யமுடியும்.