சமூக வலைத்தளமான டுவிட்டா் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார், டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க். இவர், உலகின் நம்பர் 1 பணக்காரராகவும் இருக்கிறார். டுவிட்டா் நிறுவனத்தில் அவர், சுமார் 9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இந்த நிலையில், ‘டுவிட்டர் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன்’ என்று கூறி பகீரைக் கிளிப்பிய மஸ்க், அடுத்த சில நாள்களில் ‘சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்க தயார்’ எனச் சொல்லியிருந்தார். அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு 54.20 டாலர் வீதம் வாங்க முன்வந்திருந்தார் மஸ்க். இவருடைய பேச்சை இலங்கையுடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்துவருகிறார்கள் நெட்டிசன்கள். ‘ப்ளீஸ்… டுவிட்டரை விட்டுவிடுங்கள். நீங்கள் டுவிட்டரை வாங்குவதற்குப் பதில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையை வாங்குங்கள்’ எனப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்திய இ-காமர்ஸ் நிறுவனத்தின் ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குனால், ‘இலங்கையின் கடன் தொகை 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் நீங்கள் டுவிட்டரை வாங்க நினைக்கும் விலை 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதனால் இலங்கையை வாங்கி சிலோன் மஸ்க் எனப் பெயரிடுங்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.