வாழ்வியல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். இது, தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூலாகும். இதற்கு பலரும் உரையெழுதி வருகின்றனர். பல மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பலரும் இதைப் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக, தங்களுக்குத் தெரிந்த வகையில் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உதாரணத்துக்கு, தஞ்சையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான வடிவேல், 1330 குறள்களையும் தலைகீழாக எழுதி சாதனை படைத்தார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியையான சீதளாதேவி, ஐஸ்குச்சிகள், சாக்பீஸ்கள், வெற்றிலை உள்ளிட்டவற்றில் 1330 குறள்களையும் பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார். இதுதவிர இன்னும் பலர் தங்களுக்குத் தெரிந்த விதங்களில் திருக்குறளை எழுதி சாதனை படைத்துவருகின்றனர். அந்த வகையில், திருச்சியைச் சேர்ந்த ஆசிரியையான அமுதா, மாமரத்தின் இலைகளில் திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார். இதில், 30 மா மரத்தின் இலைகளில் 1,330 திருக்குறள்களையும் 20 மணிநேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார், அமுதா.