கர்நாடகாவில் பி.ஜே.பி. தொண்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டது அம்மாநில அரசியலில் புயல்வீசத் தொடங்கியது. இதைக் கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இப்பிரச்சினை அம்மாநில அரசுக்கும் அமைச்சர் ஈசுவரப்பாவுக்கும் மேலும் நெருக்கடியைத் தந்தது. இதையடுத்து, ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா செய்வதற்கு முன் தன் ஆதரவாளர்களைச் சந்தித்த ஈசுவரப்பா, ‘என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது. நான் நிரபராதி. அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். இதிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன். பின்னர் மீண்டும் அமைச்சர் ஆவேன்’ என்றார். இவர் ராஜினாமா செய்வதற்கு இந்தப் பிரச்சினை மட்டும் காரணமல்ல, இன்னும் பல விஷயங்கள் உள்ளன என்கின்றனர், கர்நாடக பி.ஜே.பிக்காரர்கள். அதில் முக்கியமாய் அவருடைய சர்ச்சைப் பேச்சுகளும் பட்டியலில் உள்ளன. ‘விரைவில் டெல்லி செங்கோட்டையில் காவி கொடி பறக்கும்’ எனப் பேசியதும், ‘கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒருநாள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைவார்கள்’ எனப் பேசியதும்கூட, இன்று அவருடைய ராஜினாமாவுக்குக் காரணமாக இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.