கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் அக்கிபா ஹனி சில வருடங்களுக்கு முன்பு துவங்கிய அமைப்புதான் ”U CAN”. உன்னால் முடியும் என்பது தான் அதன் பொருள் . இதன் நோக்கமே புன்னகையுடன் சேவை செய்யவேண்டும் என்பதுதான். . ”U CAN” அமைப்பை பொறுத்தவரை நன்கொடை கிடையாது. மிகுந்த ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் சாதி, மதம் அற்ற சாதாரண மக்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு. இந்த அமைப்பைத் துவங்கிய அவர் முதலில் பசுமை ஏற்படுத்தும் நோக்கில் தன் நண்பர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து செடிகள் நடுவதை முதல் பணியாகச் செய்துவந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு சென்னை,கடலூர் போன்ற மாவட்டங்களில் வெள்ள நிவாரணங்களைத் தனது குழுவுடன் மேற்கொண்டார். அதன் பிறகு ஏற்பட்ட இயற்கை சீற்றங்களான ஒக்கி, வார்தா,கஜா போன்ற பேரழிவுக் காலங்களில் தன் குழுவுடன் களத்திற்குச் சென்று உதவிகள் பல புரிந்தார். ஆதரவற்று தெருவோரம் இருப்பவர்களுக்கு சில தனியார் உணவகங்களின் உதவியுடன் தினமும் உணவு அளித்து வருகிறார். முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியவர்களுக்கும் ஆடை போன்ற அத்தியாவசியப் பொருள்களை அளித்துவருகிறார். மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளை செய்துவருகிறார். ஆதரவற்ற பார்வையில்லா இரண்டு ஜோடிகளுக்கு ”U CAN” அமைப்பின் மூலம் சீர்வரிசையுடன் திருமணம் செய்துவைத்துள்ளார். தன் நண்பர்கள், தன்னிடம் படிக்கும் மாணவர்களின் உதவியுடன் மட்டுமே பல சமூகப் பணி ஆற்றிவரும் அக்கிபா All India Radio ஜாக்கியாகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடலூர் இயற்கை பேரிடர் மீட்புப் பணிக்காக ‘கலாம் விருது’ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சேவை தொடர நாமும் வாழ்த்துவோம்.