தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். எனினும், நீட் விலக்கு உள்ளிட்ட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்காத ஆளுநரின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். முன்னதாக, திமுகவின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட், விசிக, மமக, கட்சிகள் ஆளுநரின் அழைப்பை புறக்கணித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்,ஏ.,க்கள் குழு ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது.