நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினத்தையொட்டி, சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதிக கட்டணம் வசூலித்ததை பயணிகளிடம் கேட்டு உறுதி செய்த அமைச்சர், கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்கும்படி அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் எனக்கூறினார். அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆம்னி பேருந்து பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.