ஒரு பெண் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய சட்டம் என எதை குறிப்பிடுவீர்கள் ?
சட்டங்கள் எல்லாமும் தெரிந்திருக்கவேண்டியது அவசியம். இதில் குறிப்பிட்ட ஒரு சட்டத்தை தெரிந்து கொள்வது வேண்டும் என்பது கிடையாது. எனக்கு இந்த சட்டம் பற்றி தெரியாது என்பது இருக்கக்கூடாது. அனைத்து சட்டம் பற்றியும் புரிதல் இருக்க வேண்டும். சட்டம் என்பது பொது அறிவு போன்றது. சாதாரணமாக நமக்கு எது சரி என்று படுகிறதோ அதை சட்டமும் சரி என்கிறது. அதே போல் பிக் பாக்கெட் அடிப்பது தவறு என்கிறோம். சட்ட ரீதியாக அதைக்குற்றம் என்று சொல்கிறது. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது தவறு என்று சொல்கிறோம் . சட்டத்தின் பார்வையில் அது குற்றம். அந்தக்குற்றத்திற்கு தண்டனையும் அளிக்கிறது. ஒரு பெண்ணை அடிப்பது, குழந்தையை துன்புறுத்துவதை தவறு என்கிறோம். சட்டம் அதற்கு குற்றவியல் சட்டத்தின் படி தண்டனை வழங்குகிறது. ஆகா, மனிதன் எதை சாதாரணமாக சரி, என நினைக்கிறானோ சட்டப்படியும் அது சரி எதை தவறு என்கிறானோ அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகிறது.
விவாகரத்து வழக்குகள் தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறதே, உங்களது கருத்து என்ன?
விவாகரத்து வழக்குகள் அதிகமாக காணப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று இதற்க்கு முன்பு ஒரு புரிதல் இல்லாமல் இருந்தது. அதேபோல் தாங்கமுடியாத அளவு பிரச்சனைகள் இருந்தால் கூட சமூகம் அதை ஏற்றுக்கொள்ளாது என்பதால் விவாகரத்து குறைவாக இருந்தது. ஆனால் இன்று விவாகரத்தை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணம் செய்துகொள்ளக்கூடிய சூழ்நிலை தற்போது உள்ளது. தனிமையில் வாழ்வதற்கான சூழ்நிலையும் அங்கீகாரம் உள்ளது. அதுவும் ஒரு காரணம். இரண்டாவதாக அந்த காலங்களில் கூட்டு குடும்பமாக இருந்ததால் பிரச்சனைகள் வரும்போது பேசி தீர்க்கப் பட்டது அந்த காலத்தில் சிறுவயதிலேயே திருமணம் செய்யப்பட்டதால் போதுமான வெளியுலக அறிவு இல்லாததால் கருத்து வேறுபாடு வருவது குறைவு. ஆனால் இன்று 24 வயதுக்கு மேல் திருமணம் நடக்கும் போது அவர்கள் முழுமையாக வெளியுலகம் தெரிந்துள்ளனர். ஆதலால் இருவரின் கருத்துக்களும் சிலசமயம் ஒன்றுபட்டு வாழ்வது கடினமாகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வும் ஒரு காரணமாகிறது. ஊடகங்களும் ஒரு காரணம் தான். தேவயானவற்றைச் சொல்வதை விட தேவையற்றவற்றை அதிகம் சொல்லித்தருகிறது. எதுவுமே நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தது. விவாகரத்து அதிகரிப்பதை எதிர்மறையாக பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. பிரச்சனைகள் அதிகம் இருக்கும் போது அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இல்லை. அது தேவையற்ற மனஅழுத்தத்தையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும். அதற்கு பிரிந்து வாழ்வதே மேல்.அதற்காக ஒரு பிரச்சனை வந்தவுடன் அவசரமாக விவாகரத்து பெறாமல் கவுன்சிலிங் சென்று பேசி தீர்க்க முயற்சிப்பது நல்லது.
படிப்பறிவு குறைவாக உள்ள பெண்களிடம் விவாகரத்து எண்ணிக்கை குறைவாக உள்ளது என்கிறார்களே அதை பற்றி ?
அப்படியொன்றும் எனக்கு தோன்றவில்லை. படிப்பறிவு இல்லை என்பதாலேயே அவர்கள் எல்லாம் பொறுத்து போவது என்பது கிடையாது. உண்மையை சொல்லவேண்டும் என்றால், தனிமையில் வாழக்கூடிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள, தினக்கூலிகளாக தான் வேலைசெய்யும் இடத்திற்கு குழந்தையுடன் சென்று அங்கேயே ஒரு தொட்டிலில் போட்டுவிட்டு பணிபுரிந்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் பல பெண்களை பார்க்கிறோம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெண்கள் கணவனை பிரிந்து தைரியமாக வாழ்கிறார்கள் ஆகவே இதில் படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடு கிடையாது
சைபர் குற்றங்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது ? குறிப்பாக பெண்களுக்கெதிரான சமூகவலைதள குற்றங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது ?
சைபர் குற்றம் பார்த்தீங்கன்னா குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பதை விட குற்றம் நடக்காமல் எப்படி தடுப்பது என்பதை பற்றி பேசுவது, அதற்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்லது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இப்போது உள்ள நவீன வசதிகளால் குழந்தைகளை, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது நடக்கிறது. இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு காவல் நிலையம் சென்று புகார் தரவேண்டும் என்பது இல்லை. ஆன்லைன் மூலமே புகார் அளிக்கும் நடைமுறை இப்போது உள்ளது. தங்களது அடையாளத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .