பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி திருப்பிச்செலுத்தாமல் வெளிநாடு தப்பிச்சென்றார் நீரவ் மோடி. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தொடா் முயற்சியால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்தநிலையில், நீரவ் மோடியின் நெருங்கிய நபரான பாரப் சுபாஷ் ஷங்கரை எகிப்தின் கெய்ரோ நகரிலிருந்து சிபிஐ அதிகாரிகள் இன்று காலை மும்பை அழைத்து வந்தனர். சுபாஷ் ஷங்கர் எகிப்தின் கெய்ரோவில் இருப்பது தெரிந்ததையடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் அவர் இந்தியா அழைத்து வரப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். நீரவ் மோடியின் நெருங்கிய நபராக செயல்பட்டவர் சுபாஷ் ஷங்கர் என்பதும், மேலும் அவரது ஒரு நிறுவனத்தில் சுபாஷ் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றியதும், இந்த விசாரணையில் சுபாஷ் ஷங்கரிடமிருந்து பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் சிபிஐ தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.