கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் பரவத்தொடங்கிய நாள் முதல் பல ஆயிரக்கணக்கானோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். தாய்மடிபோல தன்னை தேடிவந்த எல்லோருக்கும் ஆதவளித்து வந்த இந்த மருத்துவமனை பேரிடர்காலத்தில் ஒவ்வொரு நாளும் போர் களமாகவே காட்சி அளித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 2021ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் இந்த மருத்துவமனை வாசலில் நீண்ட தூரம் நின்றிருந்த காட்சிகள், கொரோனாவின் கோரத்தாண்டவத்தை எடுத்துக்காடியது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இன்று முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், இன்று ஒரு கொரோனா நோயாளிகள் கூட இல்லாத நிலையை அரசுடன் இணைந்து மருத்துவர்கள், முன்களப்பணியாளர்களோடு சேர்ந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி உருவாக்கி உள்ளனர். மேலும், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த வளாகம் இன்று நோயாளிகள் இல்லாமல் இருந்ததைப் பார்த்து மருத்துவர்களும், ஊழியர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.