அன்றைய மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் அழகன்பட்டி என்ற ஊரில் 1927ம் ஆண்டு பிறந்தார் ஏ.எஸ்.பொன்னம்மாள். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அவர். ஏழு முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சின்ன கிராமத்தில், படிக்க வாய்ப்பில்லாத கிராமத்தில் பிறந்த பொன்னம்மாள், மூன்றாவது வகுப்பு வரை பக்கத்து கிராமத்திலேயே படித்தார். வைத்தியநாத அய்யர் என்ற சமூக ஆர்வலர் தாழ்த்தப்பட்ட வகுப்பு குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க சிதம்பரத்திற்கு அழைத்துச் சென்று படிக்க வைத்தார். அதன் மூலம் பொன்னம்மாளுக்குப் பள்ளிப் படிப்பு தடையில்லாது கிடைத்தது. பத்தாவது படித்து முடித்து மீண்டும் அழகன்பட்டி திரும்பினார் பொன்னம்மாள்.
பழனியில் நேருவை பொன்னம்மாள் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. அவர் அரசியலில் நுழைவதற்கு அது அடித்தளமாயிருந்தது. இரட்டை உறுப்பினர் தொகுதியில் முதன் முதலாகப் பட்டியலினத்தவருக்கான இடத்தில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சியினால் பொன்னம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு பெண், அதுவும் படிக்கவோ அரசியல் பழகவோ வாய்ப்பில்லாத ஒரு பெண் அரசியலுக்கு வந்தால் என்ன ஆபத்தெல்லாம் வருமோ, அதை எல்லாம் தன் சுய தேடலின் மூலமும், அடுத்தவருக்காக வாழ வேண்டும் என்ற அக்கறை மூலமும் பொன்னம்மாள் கடந்து வந்தார். 23 வயதில் 25 வயதாகி விட்டது என சொல்லி சட்டமன்ற உறுப்பினரானார் அவர். அதற்குப் பிறகு நிலக்கோட்டை தொகுதியில் அவர் காலடி படாத நிலமே இல்லைஎனலாம்.
நிலக்கோட்டை, சோழவந்தான் பழனி இந்தப் பகுதிகளில் சாலைகள் பாலங்கள் பள்ளிகள் எல்லாமே பொன்னம்மாளின் பெயர் சொல்லும். இந்தக் காலத்து அரசியல்வாதி போல கல் வெட்டு எல்லாம் அமைத்து தன் பெயரை அவர் போட்டுக்கொள்ளவில்லை.
’பொன்னம்மா அக்கா’ என்று எல்லோராலும் அவர் கடைசி வரை அழைக்கப்பட்டார். மக்கள் பணிக்காக கிராமம் கிராமமாகப் படியேறும் போது அவருக்கு உணவு வழங்க எல்லோர் வீட்டு சமையல்கட்டும் திறந்தே இருந்தது. ஒவ்வொருவர் வீட்டிலும் சாப்பிட என்ன இருந்ததோ அதை உரிமையோடு எடுத்து சாப்பிட்டு வேலை செய்தவர் அவர். குடும்ப உறுப்பினராக மக்கள் கருதும் மனோநிலையை அவருடைய பணிகள் வளர்த்திருந்தன.
சிறிய வயதிலேயே பொன்னம்மாளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தது. இரண்டாவது வாரிசு வேண்டும் என்று அவருடைய கணவர் நிர்ப்பந்தம் செய்தாராம். பொதுவாழ்வில் சாதிக்கத் துடித்த பொன்னம்மாள் தனது தாலியைக் கழற்றித் தன் தங்கையின் கழுத்தில் போட்டு, தன் தங்கையைத் தன் கணவர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். தங்கையுடன் தன் கணவர் குடும்பம் நடத்தியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சமூக சேவையில் தன் மொத்த வாழ்வை அர்ப்பணித்தார் பொன்னமாள். பொது வாழ்க்கைக்காகத் தன் வாழ்க்கையைத் தூக்கி எறிந்தவர் அவர்.
குடும்ப வாழ்க்கையிலிருந்து தொடங்கிய அவரது பொது வாழ்க்கை , அடுத்த பெரிய எதிர்கொள்ளலாக எதிர்க்கட்சிகளின் சவால்களோடு தொடங்கியது.
எல்லா எதிர்க்கட்சிகளும் விரும்புகின்ற அக்காவாகவே பொன்னம்மாள் இருந்தார். அந்த வகையில் ஒரு முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஒரு முறை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தார். போய் விருந்தில் கலந்து கொண்டார் பொன்னம்மாள். அப்பொழுது உடன் ஜானகி அம்மாவும் இருந்தார்.
’மக்களுக்காகத் தொடர்ந்து அரசியல் செய்யுறீங்க. கழகத்துல இணைஞ்சுட்டீங்கன்னா, அமைச்சராகிடலாமே’ என்று எம்.ஜி.ஆர். சொன்னாராம். அதற்கு சாப்பிட்டுக் கொண்டே பொன்னம்மாள் அக்கா பேசினாராம். ’தூக்குல தொங்குனாலும் தொங்குவேனே ஒழிய, கழகத்துல சேரமாட்டேன். நல்ல விசயம் பண்ணுங்க. ஆதரவு எப்பவும் உண்டு’ என்று அடித்துச் சொன்னாராம் அவர்.
அவர் சொன்ன பதிலில் உறைந்து அமைதியானாராம் எம். ஜி. ஆர்.
அன்றைக்கெல்லாம் தமிழக முதலமைச்சர் அழைத்துப் பேசும் அளவுக்கு மறுக்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் பொன்னம்மாள். ஆனால் அந்த ஆளுமையையும் நிதானமாக வென்ற பெண் ஆளுமை பொன்னம்மாள்.
மாவூத்து அணை உருவான கதை பொன்னம்மாளின் அரசியல் வரலாற்றில் முக்கியமானது ஆகும்.
ஒரு நல்ல மழைக்காலத்தில் விடிய விடிய மழை பெய்தபோது சிறுமலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடிய வெள்ளம் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த இரயிலை வெள்ளத்தில் அடித்துச் சென்றது. அதில் ஒரே இரவில் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து சடலங்களாக மிதந்தனர். இரவு இரண்டு மணிக்குத் தகவல் வந்தது. உடனடியாக இரவோடு இரவாக அந்த இடத்திற்கு விரைந்தார் பொன்னம்மாள். இரவெல்லாம் உடல்களைத் தேடுவதும் உரியவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதுமாக பொழுது கடந்தது. எல்லாம் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தவுடன் அனைவரும் மறந்து விட்டு விடுகின்ற விசயத்தை சட்டமன்றத்தில் பேசத் தொடங்கினார் பொன்னம்மாள். அதற்கு முன்பு பொறியாளர்களை அழைத்துச் சென்று எப்படி திடீரென வெள்ளம் வந்தது என அவர் ஆராய்ந்தார். அதற்காகப் பாதையில்லாத காடுகளிடையே கள ஆய்வில் அவர் இறங்கினார். சிறுமலையில் அத்தனை சிற்றாறுகள் ஓடி வருவதையும் அதற்காக அணை ஒன்று கட்டப்பட வேண்டும், ஓடிவருகின்ற தண்ணீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம் என்றும் புரிந்து அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் சட்டமன்றத்தில் , அதைக் கட்டுவதால் அரசுக்கு ஏதும் ஆதாயமில்லை என்று முதல்வர் கலைஞர் பேசியபோது, ’அரசு என்ன தனியார் நிறுவனமா, செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கும் லாப நஷ்டம் பார்க்க? மக்கள் நலன் கருதி கட்டுமான வேலைகள் சிலவற்றை செய்ய வேண்டும்’ என்று வாதாடினார் அவர். மதுரை திண்டுக்கல் சாலையிலிருந்து சிறுமலை நோக்கி செல்கின்ற இடத்தில், சிறுமலையை ஒட்டி மாவூத்து அணை கட்ட ஆவண செய்தார் பொன்னம்மாள். அவருடைய முயற்சியினால் அணை கட்டப்பட்டு விட்டது. ஆனால் எதிலும் தன் பெயரைப் பொறித்து வைக்கவில்லை அவர்.
7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்ட பொன்னம்மாள், 5 முதலமைச்சர்களோடு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர்.
கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கு கலைஞர் தற்காலிக சபாநாயகராக கலைஞர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பொன்னம்மாள்.
நிலக்கோட்டை தொகுதியில் பெண்கள் அரசு கல்லூரியைக் கொண்டு வந்த பெருமை பொன்னம்மாளைச் சேரும். எளியவர்கள் எளிதில் அனுகக் கூடிய வகையில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய பொன்னம்மாள் அக்கா எதிர்க்கட்சித் தலைவர்களும் நிராகரிக்க முடியாத இடத்தில் தன் மக்கள் பணியை ஆற்றினார்.