நாடாளுமன்றத்தில் இன்று பேசிய பா.ம.க., எம்.பி., அன்புமணி ராமதாஸ், தமிழகத்தின் 38 மாவட்டங்களில், 22 மாவட்டங்களின் தண்ணீர் தேவையை காவிரி ஆறு தான் தீர்த்து வைக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, அணையின் குறுக்கே எந்த கட்டுமானங்களையும் கட்ட அனுமதி இல்லை. ஆனால், மேகதாது அணையை கட்ட, ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்த விஷயத்தில், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கு முன், மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பேசினார். இதற்கு கர்நாடக மாநில எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, ”ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட பெங்களூருக்கு குடிநீர் தேவைப்படுகிறது. அதைத்தான், நாங்கள் கையேந்தி கேட்கிறோம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்,” என்று எடுத்துரைத்தார்.