கிராமத்தில் பள்ளிக்கூடம் என்னும் கதை பழசு. ஆனால், கிராமமே பள்ளிக்கூடம் என்னும் கதை புதுசு. ஆம், ஒரு கிராமத்தையே பள்ளிக்கூடங்களாக மாற்றியிருக்கிறார், ஆசிரியர் ஒருவர். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரை ஒட்டியுள்ள தரம்பூரா கிராமத்தில்தான் இத்தகைய அதிசயம் நிகழ்ந்துள்ளது. இக்கிராமத்தில் எங்கு திரும்பினாலும் கல்வியைப் பயிற்றுவிக்கும் படங்களும் சூழலும் மட்டுமே தெரியும். இங்கு அமைந்துள்ள ஒவ்வொரு சுவரும், கல்வியைப் போதிக்கிறது. அப்படி ஒரு மதிக்கத்தக்க பரிசை, அங்குள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியரான தினேஷ் குமார் மிஸ்ரா இக்கிராமத்திற்கு வழங்கியுள்ளார். இதனால் அக்கிராமத்தில் உள்ள சுவர்கள் எல்லாம் பள்ளிப் பாடங்களைக் கற்பிக்கும் ஓவியங்களாய்த் திகழ்கின்றன. அரசுப் பள்ளிகளைக் கண்டாலே ஓட்டமெடுக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு மத்தியில் இவரது செயல் அரசுப் பள்ளிகளில் படித்தாலும் அறிவு வளரும் என்பதை மெய்ப்பிக்கிறது. இதனால், அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. தவிர, இதுபோன்ற ஆசிரியர் எல்லாக் கிராமங்களிலும் இருந்தால் அரசுப் பள்ளிகள் இன்னும் மேன்மை பெறும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.