கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர 26 அமைச்சர்களும் பதவி விலகினர். பின்னர், புதிதாக 4 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பதற்காக அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவிற்கும், இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து இன்று கூடும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு தயார் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திரக்கட்சி விலக்கி கொண்டுள்ள நிலையில், இலங்கை தொழிளாலர் காங்கிரஸ் கட்சியும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் எதிர்கட்சிகள் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.