தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “வேட்பு மனுவில் வருமானம் உள்ளிட்ட உண்மை விவரங்களை ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மறைத்தார். எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது சட்டவிரோதம். அதனால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், “தனது வருமானத்தில் பல்வேறு தகவல்களை ஓ.பி.ரவீந்திரநாத் மறைத்துள்ளார். மேலும்,ரூ.4 கோடியே 16 லட்சம் அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ரூ.1 கோடியே 35 லட்சத்தை மட்டுமே வேட்பு மனுவில் காட்டியுள்ளார். சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் வேட்புமனுவை ஏற்றது முறையற்றது. அதனால் மிலானி தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொண்டு, ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பெற்ற வெற்றி செல்லாது” என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளதோடு, இது தொடர்பாக ரவீந்திரநாத் மற்றும் மனுதாரர் மிலானி ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.