ஹரியாணா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், ஃபரிதாபாத் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் ஆகியனவற்றிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு: ஹரியாணா கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதில் இருவர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள், இருவர் உள்ளூர்வாசிகள், ஒருவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
144 தடை, இணையதள முடக்கம்: ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. உடனடியாக போலீஸுக்கு தகவல் கிடைக்க போலீஸார் அங்கு குவிந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் போலீஸார் சுட்டனர். அரசாங்கம், தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.