மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நடவடிக்கைத் தொடங்கிய 3 நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு.
மழைக்காலக்கூட்டத்தொடரின் 7வது நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்துடன் அவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. கேள்வி நேரத்துக்கு எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்திய நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
மாநிலங்களவையில் அவைத் தொடங்கியதும் அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பிறந்த நாள் கொண்டாடும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஒய்வு பெற இருக்கும் உறுப்பினருக்கு பிரியாவிடை குறிப்பும் வாசித்தார். அதனைத் தொடர்ந்து அவைக்கு விதி 267 -ன் கீழ் மணிப்பூர் குறித்து விவாதிக்க 47 நோட்டீஸ் வந்துள்ளதாக அவைத் தலைவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குறுகிய கால விவாதத்தினை தான் ஏற்றுக் கொண்டதாகவும், அரசு அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் மீண்டும் தெளிவு படுத்திய அவைத் தலைவர், கட்சி நலன்களுக்கு அப்பாற்பட்டு இந்த விஷயத்தில் தான் ஏற்றுக் கொண்டது போல குறுகிய கால விவாதத்திற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.