மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் மூன்று பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், மே 6-ம் தேதி 45 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது எரிந்த உடலின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே 3-ம் தேதி கலவரம் தொடங்கியதில் இருந்து அங்கு பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகளின் தொடர்ச்சியான சம்பவங்களில் இந்தக் கொடூரமும் ஒன்று.
கடந்த மே 4-ம் தேதி தெளபால் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஜூலை 19-ம் தேதி வீடியோ மூலம் வெளியாகி தேசத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாநிலத்தில் இணையத் தடை முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையிலும், அந்தத் கொடூரம் வெளியே வந்துள்ளது. அந்த வன்கொடுமைத் தொடர்பாக இதுவரை 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.