ஆட்டிசம் குறித்துப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. ஆனால், இந்த ஊரடங்கு காலங்களில்தான் ஆட்டிசம் குழந்தைகள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக ஆட்டிசம் அதிகரித்துவருவதையும் மனநல மருத்துவராக என்னால் காணமுடிகிறது.
ஆட்டிசம் என்பது நரம்பியல் சம்பந்தப்பட்ட வளர்ச்சி குறைபாடு (Neuro Developmental Disorder). குறைபாட்டுக்கும் (Disorder), நோய்க்கும் (Disease) வித்தியாசம் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறைபாடு என்பது ஒரு நிலை, நோய் என்பது தற்காலிகமான வியாதி. மருந்து, மாத்திரை கொடுத்து சரி செய்துவிடலாம். டிஸ் ஆர்டர் என்பதை எவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவு விரைவாகக் குணப்படுத்தலாம். இது நரம்பியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நாம் இதனை 3 வயதிற்குள்ளாகவே கண்டுபிடிக்கலாம். எல்லாவிதமான மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று உயிரியல் (Biological). அதாவது பரம்பரை மற்றும் மரபணு காரணிகள். இரண்டாவது சுற்றுச்சூழல் காரணிகள் மூன்றாவது சமூகக் காரணிகள். முக்கியமாகக் குடும்பத்தில் யாருக்கேனும் வலிப்பு, மனநலம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வரக்கூடும்.
மூன்று பிரச்சினைகள்
இது நரம்பியல் சம்பந்தப்பட்டது என்பதால் மூளையில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். நரம்புகள் பாதிக்கப்படுகிறபோது மூன்று பிரச்சினைகள் ஏற்படும். முதலாவது சமூகத் தொடர்பு. அதாவது அனைவருடனும் இயல்பாகப் பழகுவதில் அவர்களுக்குச் சில பிரச்சினைகள் இருக்கும். அவர்கள் அவர்களுடைய உலகத்திலேயே இருப்பார்கள். சில நேரம் தொடுவதுகூட, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பிடிக்காது. இரண்டாவது தொடர்பு. அதாவது, பிறரிடம் பேசுவது அவர்களுக்குக் கடினமாக இருக்கும். மூன்றாவது, அறிவாற்றல் திறன்கள். இவை மூன்றும்தான் அனைவருக்கும் தெரியக்கூடிய பிரச்சினைகள். இதனைவைத்தே 3 வயதிற்குள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கண்டுபிடிக்கலாம்.
சிகிச்சை முறை
இதற்கான சிகிச்சை என்னவென்றால் கண்டிப்பாகப் பயிற்சிதான். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பேசும் திறன் குறைவாக இருக்கும். கண் தொடர்பு இருக்காது. சிலர் ஒரே மாதிரியான செயலை மட்டுமே செய்வார்கள்; சிலர் பொம்மைகளை வைத்து மட்டுமே விளையாடுவார்கள்; சிலர் சரியாக மென்று சாப்பிடமாட்டார்கள்; மற்றவர்கள் தூக்கிக் கொஞ்சினால் பிடிக்காது, மற்ற குழந்தைகளுடன் விளையாட மாட்டார்கள். இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருக்க வாய்ப்புள்ளது.
குழந்தைகள் பிறந்ததுமே, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய முடியும். குழந்தைகளை அம்மா தூக்கும்போது, அவை அம்மாவின் கண்களைப் பார்க்காது; சிரிக்காது. அம்மா தூக்கி வைத்தாலும்கூடக் கையில் இருக்காமல் கீழே இறக்கிவிடச் சொல்லி அழும். இதுபோன்ற விஷயங்களைப் பார்க்கும்போது மற்றக் குழந்தைகளைவிட மாறு பட்டு இருக்கும். அதனைவைத்து நாம் கண்டறியலாம்.
ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்
இதனை எவ்வளவு சீக்கிரம் கண்டறிந்து கொண்டுவருகிறீர்களோ, அவ்வளவு விரைவாகக் குணப்படுத்தலாம். அதுவும் எந்த வயதில் எவ்வளவு தீவிரமாகக் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துள்ளது. இந்தக் காலத்தில் ஆட்டிசத்திற்கான சிகிச்சைகள் பல உள்ளன. அதில் ஒன்று Applied Behavior Analyses. அதாவது, அவர்களால் செய்ய இயலாத விஷயங்களை எப்படிச் செய்வது என்று சொல்லித்தருவது. எப்படிக் கண் தொடர்பை மேற்கொள்வது, எப்படி அனைவருடனும் பழகுவது எனச் சொல்லித்தருவது, மொழித்திறனை வளர்ப்பது, பேசும் திறனை வளர்ப்பது… இதுபோன்ற அனைத்தையும் நாம் சொல்லித் தந்தால் கண்டிப்பாகக் குணமாக்கலாம். ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஆட்டிசத்தைக் குணப்படுத்துவதற்கான பயிற்சிகளின் தொகை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. இதற்கு மருந்து மாத்திரைகள் என்று ஏதும் இல்லை. குழந்தை மிகவும் துறுதுறுவென இருப்பது, தன்னைத்தானே சுவரில் இடித்துக்கொள்வது, கடித்துக் கொள்வது போன்ற அறிகுறிகளோடு இருந்தால் அவர்களைத் தற்காலிகமாகக் குணப்படுத்த மருந்துகள் கொடுக்கலாம். அதன்பின் சிறப்புக் கல்வி, சிறப்புத் தலையீடு மூலமாகக் குணப்படுத்தலாம். ஆனால், அதற்குக் கொஞ்சம் செலவாகும். செலவைப் பார்க்காமல் ஆரம்பத்திலேயே சரியான பயிற்சிகளைக் கொடுத்தால் சீக்கிரம் குணப்படுத்தலாம்.
சென்னையிலும் பல இடங்களில் ஆட்டிசத்தைக் குணப்படுத்தக்கூடிய ஏபிஏ தெரபி நிலையங்கள் (Transition centre) பல உள்ளன. குறிப்பாக, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்றன. அது தவிர்த்து சில மருத்துவமனைகளிலும் குறைந்த செலவில் சிகிச்சையளிக்கப்படுகிறது. தேவையான சிகிச்சைகளை சரியான நேரத்தில் கொடுத்தால், கண்டிப்பாக அந்தக் குழந்தைகளும் இயல்பு வாழ்க்கை வாழலாம். ஆட்டிசம் என்பது பெரிய வட்டம், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருக்கலாம், சில குழந்தைகள் சில விஷயத்தில் அதிக புத்திசாலித்தனமாக இருக்கக்கூடும். சில குழந்தைகள் தானாகவே பல மொழிகளில் எழுத ஆரம்பிக்கும். இந்தத் தேதிக்கு, இந்தக் கிழமை என்பதை அப்படியே சொல்லும். இப்படி ஆட்டிசம் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். அதற்கான சிகிச்சையை விரைவாகக் கொடுத்தால் கண்டிப்பாக இயல்பு வாழ்க்கை வாழ முடியும்.