2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவெடுத்துள்ள நிலையில், ஏற்கெனவே இருந்த யுபிஏ (UPA) ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயருக்குப் பதிலாக 4 புதிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இறுதி முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
2004-ல் உருவான யுபிஏ: ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004-ஆம் ஆண்டு உருவானது. இதில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகள், மைய அரசியல் சார்பு கட்சிகள் இணைந்தன. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும் ஆனார். ஐக்கிய மதச்சார்பற்ற கூட்டணி ‘United Secular Alliance’, முற்போக்கு மதச்சார்பற்ற கூட்டணி ‘Progressive Secular Alliance’ போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயர் இறுதி செய்யப்பட்டது. ‘முற்போக்கு கூட்டணி’ என்ற வார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதும், அதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தன. ஆரம்பத்தில் சிபிஐ, சிபிஎம், பார்வர்டு பிளாக் போன்ற இடது சாரிகள் ஐமுகூ க்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கினர். அதேபோன்று கூட்டணியில் இல்லாவிட்டாலும் சிறு கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு வழங்கின. அதில் சமாஜ்வாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நம்பிக்கை வாக்கெடுப்புகள் வந்தால் ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தன. எனினும் இக்கட்சிகள் அரசின் அங்கமாக இருக்கவில்லை.
வீழ்ச்சி கண்ட யுபிஏ: 2004-ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் யுபிஏ கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் 2006-ல் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. 2007-ல் வைகோவின் மதிமுக வெளியேறியது. 2008-ல் மட்டும் 4 கட்சிகள் வெளியேறின. 2009-ல் பாமக வெளியேறி அதிமுகவில் இணைந்தது. ஜம்மு காஷ்மீரின் பிடிபி கட்சியும் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.
2009-ல் மீண்டும் ஐமு கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 206 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அப்போது இடதுசாரிகள், காங்கிரஸை ஆதரிக்கவில்லை. 2012-ல் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியேறியது. அதேபோல் ஜார்க்கண்டின் ஜெவிஎம் – பி கட்சியும் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.