திமுக ஆட்சியின் திறமை இன்மையால், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவின் மதுரை மாநாடு ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம்: “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்’’ என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையிலும்; கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள மாநாடு வரலாற்று முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கிலும், கழக மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து, கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் கம்பீரமாகக் காட்சி அளிப்பதைக் கண்டும்; ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதைக் கண்டும், உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக, கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்திவருபவர்களுக்கு மத்தியில், “இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்று வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர் எம்.ஜி.ஆரால், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் தான் அதிமுக. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற, தமிழர் நலனுக்காகத் தங்களையே அர்ப்பணித்த மகத்தான தலைவர்களின் வழியில் சமத்துவ, சமதர்ம சமுதாயம் உருவாகிடப் பாடுபடும் ஒரே இயக்கமும் அதிமுக தான். ஜெயலலிதா, “எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை; எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை; நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத் தான்; தமிழக மக்களுக்காகத் தான்’’ என்று வீர முழக்கமிட்டார்.