டெல்லியில் யமுனை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். மேலும் மக்களைக் காப்பாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றுவதாகவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
முன்னதாக நேற்று (ஜூலை 12) 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி யமுனை ஆற்றில் 208.51 மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் பாய்கிறது. இது இன்று மாலை 5 மணிக்குள் 208.75 மீட்டர் என்ற அளவை எட்டும் என்று மத்திய நீர் வள ஆணையம் கணித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “யமுனையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது வெள்ளம் யமுனையைச் சுற்றியுள்ள சாலைகளில் புகுந்துள்ளது. அதனால் வெள்ள அபாயம் இருக்கும் பாதைகளை மக்கள் தவிர்க்க வேண்டும். வெள்ளம் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்களைக் காப்பதே இப்போதைய தலையாய கடமை. இந்த அவசர காலத்தில் மக்கள் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்குமாறு வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.