மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநிலத்தில் வன்முறையைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
குகி பழங்குடியினருக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு உட்பட மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரணை செய்தது.
அப்போது, மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், வன்முறையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மறுவாழ்வு நடவடிக்கைகள், நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் விவரங்கள், மணிப்பூரின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசு ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது.