அரியலூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மதம் மாறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாலேயே தற்கொலை செய்துகொண்டதாக பா.ஜ.க., குற்றம்சாட்டி சிபிஐ விசாரணை கோரி வருகிறது. ஆனால், அந்த மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில் அப்படியேதும் அவர் கூறவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலையில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து மேற்கொண்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் படித்துவந்தார். அந்தப் பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி அந்த மாணவி விடுதியில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதற்கு அடுத்த நாள் அந்த மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவியின் பெற்றோர் மகளைத் தங்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் தொடர்ந்து வயிற்றில் பிரச்சினை இருக்கவே, அருகில் உள்ள மருத்துவமனையில் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர். ஆனாலும், மாணவிக்கு உடல்நிலை சரியாகாமல் மோசமடைந்துள்ளது. அது குறித்து விசாரித்த போது, அந்த மாணவி பூச்சி மருந்தைத் குடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஜனவரி 15 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு மாணவிக்குக் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதும் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
மாணவியின் வாக்குமூலம்
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மாணவி தங்கியிருந்த விடுதி வார்டனைக் கைது செய்தனர். அதன் பின்னர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அந்த மாணவி ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. ஏற்கெனவே தஞ்சாவூரைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் தலையிட்டு, மத மாற்றம் செய்ய முயற்சித்ததால்தான் மாணவி உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்து, பள்ளிக்கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநில பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், “மாணவியை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்று குற்றம்சாட்டினார். அத்துடன், அந்த மாணவி பேசும் வீடியோ காட்சியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்திருந்தார். அதில், இரண்டு வருடங்களுக்கு முன்பாகத் தன்னைப் பள்ளியில் மதமாறும்படி கட்டாயப்படுத்தியதாகவும், அதனைத் தான் ஏற்காததால் திட்டியும் அதிக வேலை வாங்கியும், கொடுமைப்படுத்தியதாகவும் அந்த மாணவி பேசியிருந்தார். மாணவியின் இந்தப் பேச்சு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதோடு பா.ஜ.க., தரப்பில் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருவதோடு சி.பி.ஐ., விசாரணையும் கோரிவருகின்றது.
மதமாற்றத்தால் மாணவி உயிரிழந்தாரா?
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். “சிகிச்சையில் இருந்த அந்த மாணவியிடம் மருத்துவர்களின் அனுமதியுடன் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் மதமாற்றம் தொடர்பாக அந்த மாணவி எந்தவிதத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேபோல, அவரது பெற்றோரும் சொல்லவில்லை. மாஜிஸ்திரேட் கொடுத்த தகவலிலும் அதுபோன்ற தகவல் இல்லை. அதனால், முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், அந்த மாணவி சிகிச்சையில் இருப்பது போலவும், அவர் பேசுவது போலவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது சிறார் சட்டப்படி குற்றம். இதை எடுத்தது யார், பரப்பியது யார் என்பது குறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், மாணவியின் பெற்றோர் மீண்டும் புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகாரில், மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதாலேயே மாணவி விஷம் குடித்திருக்கலாம் என்று கூறியிருந்தனர். இதையடுத்து, அது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியிருக்கின்ற நிலையில், மாணவியின் இரண்டாவது வீடியோவும் வெளியானது. அதில், மாணவி தங்கிப் படித்த விடுதியில் இருந்த சகாய மேரி என்கிற வார்டன், மாணவியைக் கணக்கு எழுதும்படி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், படிக்க விடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார். “ குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த வருடம் நான் லேட்டாகப் பள்ளிக்கு வந்துள்ளதால் எனக்குக் கணக்கு புரியவில்லை என்று கூறினேன். ஆனாலும், அவர் அதை ஏற்காமல் கணக்கை நீதான் எழுத வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார். மேலும். விடுதியில் கேட் பூட்டுவது, திறப்பது போன்ற வார்டன் செய்யும் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன். இந்தப் பள்ளியிலேயே நான்தான் நன்றாகப் படிக்கும் மாணவி. நான் கணக்குப் போட்டுக்கொடுத்தாலும் தவறு என்று கூறுவார். ஒரு கணக்கு க்குப் பல நேரம் அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டும். இப்படி வார்டன் வேலை கொடுப்பதால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் மதிப்பெண்ணும் குறைந்தது. இப்படியே போனால் நாம் நல்ல மதிப்பெண் எடுக்க முடியாது என்பதால் தான் மருந்து குடித்தேன்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து மாணவியின் தந்தை முருகானத்திடம் பேசியபோது, “இதுகுறித்து தற்போதைக்குப் பேச முடியாது. நானே என் மகளை இழந்து இருக்கிறேன். இந்த நேரத்தில் நான் எவ்வாறு பேசுவேன்? அதுமட்டுமல்லாமல் காவல்துறை அலுவலகத்தில் இது குறித்து எதுவும் பேசக் கூடாது என்று கூறியுள்ளனர். அதனால் நான் பேசுவது சரியல்ல . என் மகளுக்கு ஏற்பட்ட நிலைமை மற்ற பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. அதற்காகத்தான் நான் போராடுகிறேன்” என்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, இது குறித்து எதுவும் தற்போதைக்குப் பேச முடியாது என்று முடித்துக்கொண்டார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகத் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், “180 ஆண்டுகளாய் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளோம். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியச் சமூகம் கல்வி மறுத்த காலத்தில், எம் பள்ளிகளே பொதுக்கல்விக்கான விடியலாய் அமைந்தது. எம்மிடம் பயிலும் குழந்தைகள் பல மதங்களையும் சமூகத்தையும் சார்ந்தவர்கள். எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிட்டதில்லை. இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி எமது சமூக அர்ப்பணத்தைக் கொச்சைப்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சித்தி கொடுமை காரணமா?
மைக்கேல்பட்டியின் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயராஜிடம் பேசினோம். “அந்த மாணவி மிகவும் புத்திசாலியான மாணவி. பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். இம்மாதிரி சூழலில் மதமாற்ற புகார்கள் எழுந்திருப்பது வருத்தமளிக்கிறது. 100 வருடமாக நடக்கின்ற கல்வி நிலையம். அங்கு அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பகுதியில் உள்ள பிள்ளைகைள் இங்கேயே தங்கி 60 ஆண்டுகளாகப் படித்து வருகிறார்கள். இப்படி எந்த மாணவியும் மதம் மாறவில்லை. இந்துத்துவா கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அப்படி மாற்றிச் சொல்ல சொல்லியுள்ளனர். அவ்வாறு சொன்னால் இப்படி வரும் என்று மாணவியின் பெற்றோர்களுக்குத் தெரியாது. மாஜிஸ்திரேட்டிடம் பேசிய அந்த மாணவி பேச முடியாமல் திணறுகிறார்.அப்படி இருக்கும் போது அந்த வீடியோவில் அவர் எப்படி அந்த அளவுக்குத் தெளிவாகப் பேச முடியும் என்று தெரியவில்லை. மேலும், விடுதியில் சில வேலைகள் இருக்கும், அதை மறுக்க முடியாது. ஆனால், மதம் மாறுங்கள் என்று யாரும் வற்புறுத்த வாய்ப்பில்லை.
அந்தப் பெண்ணுடைய அம்மா இறந்துவிட்டதால், அவருடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த இரண்டாவது அம்மா அதாவது அந்தப் பெண்ணின் சித்தி அவரைக் கொடுமைப் படுத்தியதாக மாணவிகளிடம் பலமுறை அந்தப் பெண் அழுது கூறியுள்ளார். மேலும், மாணவிக்குக் கை, கால்களில் வெள்ளைத் தோல் இருப்பதால் அவளுடைய சித்தி தனியாகத் தட்டு, தனி டம்ளர் என்று கொடுத்து தான் சாப்பாடு போடுவாராம். அவர்களுடன் ஒன்றாக இணைந்து இருக்கக்கூடிய நிலையில் அந்த மாணவியின் வீடு இல்லை. தற்போது படிப்பு முடிய உள்ளதால் அங்கேதானே போய் இருக்க வேண்டும் என்கிற மன உளைச்சல் மாணவிக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகக்கூட இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம்” என்றார்.
வாக்குமூலம் தந்த போனை ஒப்படையுங்கள்
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவி தற்கொலை வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோவைப் பதிவு செய்தவர் வல்லம் டிஎஸ்பி முன்பு ஆஜராகி மொபைல் போனை ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், “தடயவியல் மைய இயக்குநர், மொபைல் போன், சிடியை ஆய்வு செய்து அவற்றின் உண்மைத் தன்மை குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையை தஞ்சாவூர் தடயவியல் மைய அலுவலர் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவியின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்த, அரியலூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் செயலர் முத்துவேல், வல்லம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராகி, தன் மொபைல் போனை ஒப்படைத்தார். அவரிடம் டி.எஸ்.பி., பிருந்தா 30 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். மேலும், மாணவியின் பெற்றோரிடம் தனித்தனியாக, தலா ஒரு மணி நேரம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவு மூலமாகவும் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆஜரான முத்துவேல், மாணவியின் பெற்றோருடன், பா.ஜ.க., நிர்வாகிகள் உட்பட பலர் வந்திருந்தனர்.
மாணவியின் தற்கொலை விவகாரத்தை பாஜக உள்ளிட்ட இந்துத்துவா கட்சிகள் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், பள்ளி அமைந்துள்ள பகுதியில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், இதனை அரசியல் ஆக்கவும் திசை திருப்புவும் முயற்சிக்கிறது என்கிற குற்றசாட்டை முன்வைக்கின்றனர் அப்பகுதி மக்கள். மாணவி மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.