ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில், அடையாளம் காண முடியாத உடல்களை உறவினர்களின் மரபணு மாதிரிகளை வைத்து பரிசோதனை நடத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. உயிரிழந்தோரின் உறவினர்கள், வாரிசுகள், ‘139’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு மரபணு மாதிரிகளை வழங்க வேண்டும். பரிசோதனைக்கு பிறகு, தங்களது உறவை உறுதி செய்து இறந்தவர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேரிட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் 83 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காண முடியாத அளவு அவர்களின் உடல் சிதைந்திருப்பதே இதற்குக் காரணம். இதனால், ரயிலில் பயணம் செய்து காணாமல் போனவர்களின் உறவினர்களில் 33 பேர் தங்கள் டிஎன்ஏ மாதிரியை கொடுத்துள்ளனர். ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இந்த டிஎன்ஏ மாதிரியை சேகரித்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளது.
டிஎன்ஏ மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் தெரிய வரும் என்றும் அதன்அடிப்படையில் உடல்கள் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் பாலசோர் நகராட்சி கூடுதல் ஆணையர் சூர்யவன்ஷி மயூர் விகாஸ் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் அரசு செலவில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், அவர்களின் குடும்பங்களுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும் சூர்யவன்ஷி மயூர் விகாஸ் கூறியுள்ளார்.