தமிழகத்திக் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் இந்த மாதம் அதாவது ஜூன் 30-ம் தேதியுடன் (நாளை) ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து புதிய தலைமைச் செயலர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.