அன்று காலை பிசியோதெரபி துறை புறநோயாளிகள் பிரிவு சற்று பிஸியாக இருந்தது. இருப்பினும் என்னால் மேகலாவை நன்றாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது மேகலாவுக்கு ஏழாவது மாதம். உடல் எடை சற்று அதிகமாக இருந்தது. அவருக்குத் தன் எடையைப் பற்றிய சந்தேகங்கள் இருந்ததால் நான் அவளைப் பார்க்க நேர்ந்தது. அது அவளது இரண்டாவது பிரசவமாக இருந்த போதும் உடல் எடையைப் பற்றி நிறைய எடுத்துரைக்க வேண்டியதாக இருந்தது. பின் நாட்கள் நகர்ந்தன. குழந்தையும் பிறந்தது.
“எப்படி இருக்கீங்க மேகலா?” என்று கேட்டபோது, “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் மேடம்” என்று என்னிடம் வந்தார்.
சுமார் 32 வயது நிரம்பிய மேகலா இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு வந்தார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, நல்ல ஆரோக்கியத்துடன் தாயும் சேயும் வீட்டிற்குச் சென்றார்கள். இருப்பினும் மீண்டும் மருத்துவமனைக்கு வர என்ன காரணம் என்கிற சந்தேகத்துடன் மேகலாவை வரச் சொல்லி பேசினேன்.
அவரும் சொல்ல ஆரம்பித்தார். “குழந்தை பிறந்ததில் இருந்து எனக்குச் சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியாகிறது . நான் காலையில் எழுந்து வேலைகளைத் துவங்குவதற்கு முன் நன்கு சிறுநீர் கழித்துவிட்டு வந்தாலும் , சில நிமிடங்களிலேயே சொட்டு சொட்டாகச் சிறுநீர் வெளியாகிறது. இதனால் என் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகிறது. இந்தக் கசிவு தும்மும்போதும் சிரிக்கும் போதும் அதிகமாகிறது.
இதுபோன்ற ஒரு உணர்வு எனக்கு ஏழு மாதத்தில் இருந்து ஏற்பட்டது. அப்போது வயிற்றில் குழந்தையைத் தாங்குவதால் இது ஏற்படும் என்று நினைத்து, குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்தும் இதே போல்தான் சிறுநீர்க் கசிவு இருக்கிறது. இது சரியாகாமல் வாழ்நாள் முழுவதும் நிலைத்துவிடுமோ அல்லது அதிகமாகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. இதற்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தெரியவில்லை” என்றார்.
பதற்றமாகவும் பயத்துடனும் இருந்த மேகலாவை அழைத்து , முதலில் அவர் பயத்தைப் போக்கி, அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினையைப் பற்றி விளக்க வேண்டும் என்று எண்ணினேன். உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன மருந்து என்று கூறுவதைவிட அந்த நோயின் தன்மையைப் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் தெளிவுபடுத்துவதன் மூலம், தேவையில்லாத பயத்தையும் பதற்றத்தையும் குறைக்கலாம்
இதைத்தான் patient education என்று கூறுவார்கள். மேகலாவிற்கு ஏற்பட்ட இந்தப் பிரச்சினை பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுவதுதான். பெண்களின் சிறுநீர்ப் பையானது அவர்களின் கருப்பைக்கு முன்பாகவும் கீழ்நோக்கியும் அமைந்துள்ளது. நமது சிறுநீர்ப்பையின் முழு கொள்ளளவு 400-600 மி.லி. பெண்கள் கருவுற்ற ஏழு அல்லது எட்டாம் மாதத்தில் குழந்தையின் எடை அதிகரிக்கும் பொழுது சிறுநீர்ப்பையின் மேல் ஒருவகையான அழுத்தத்தைக் கருப்பை செலுத்துகிறது . இதனால் சிறுநீர்ப்பை முழுமையாக விரிவடைய முடியாமல் அதிலிருக்கும் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியாகிறது. இதை நாம் incontinence என்று கூறுவோம்.
இந்த வகை incontinence பெரும்பாலும் குழந்தை பிறந்தவுடன் சரியாகிவிடும். ஆனால், அதோடு மட்டும் அல்லாமல் நம்முடைய இடுப்புப் பகுதிகளின் உள்புறம் பெல்விக் பகுதியில் கருப்பையைத் தாங்கிப்பிடிக்கும் தசைப்பகுதிகள் பல உள்ளன. இவற்றை பெல்விக் தள தசைகள் என்று கூறுவோம். இந்தத் தசைகள் நமது கருப்பைக்கு ஒரு தளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வளரும் கருவின் எடைக்கு ஏற்றதுபோல் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது. நமது சிறுநீர்ப்பையும் கருப்பையும் மிக அருகில் இருப்பதால் சிறுநீர் நிரம்பியதும் அதைச் சீராக வெளியேற்றுவதற்கு இந்தத் தசைகள் உதவுகின்றன.
குழந்தையின் எடை அதிகரித்து அதனால், இந்தத் தசை பலவீனமாகிவிடக் கூடும். இந்த நிலை குழந்தை பிறந்த பிறகும் நீடிக்கிறது. இதை நாம் post – natal incotinence என்று கூறுவோம். மேகலாவுக்கு ஏற்பட்டிருப்பதும் இதேதான். பொதுவாகக் கர்ப்பகாலத்தின் போதும் சில ஹார்மோன் மாற்றங்களாலும் இந்தத் தசைகள் தம் தன்மையில் இருந்து மாறிவிடுகின்றன. இந்த மாற்றம் மீளக்கூடிய மாற்றமே. சில சமயம் உடல் பருமன், அதிக பிரசவம் போன்ற காரணங்களால் இது சில மாதங்கள் நீடிக்கிறது.
இதனை எப்படிச் சரி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம். இது பெரும்பாலானோருக்குப் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தினாலும் பயிற்சிகள் செய்து சரிசெய்துவிடலாம். குழந்தை பிறந்த உடன் பெண்களின் உடல்நிலையை மகப்பேறு மருத்துவரிடம் காண்பித்து உடலின் சீரான செயல்பாட்டை உறுதிசெய்துவிட்டுப் பின் இதற்கான பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கலாம்.
kegel’s exercise எனும் உடற்பயிற்சிகள் நல்ல பலன் கொடுக்கும். இந்தப் பயிற்சிகளைப் படுத்துக்கொண்டு நமது சிறுநீர் உறுப்புகளைச் சுருக்கி 5 நொடிக்குப் பிறகு விரிவடையச் செய்தலாகும். இவற்றை பிசியோதெரபிஸ்ட் எனும் இயன்முறை மருத்துவரிடம் முறையாகக் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும்.
இந்தவகைப் பயிற்சியோடு மட்டுமல்லாமல் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகம் நீர் குடித்தல், போதுமான உடல் எடையைப் பராமரித்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்து வந்தோமென்றால் 6 முதல் 12 வாரங்களில் இதனைச் சரி செய்யலாம்.
முதலில் இந்தவகைப் பயிற்சிகளைப் பயிற்றுரின் மேற்பார்வையில் செய்ய ஆரம்பித்துப் பின் தானாகவே கவனித்துச் செய்யக்கூடிய பயிற்சிகளாகச் செய்யலாம்.