day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நிர்மலா சீதாராமன் – ரபேல் முதல் பொருளாதார மீட்பு வரை

நிர்மலா சீதாராமன் – ரபேல் முதல் பொருளாதார மீட்பு வரை


அவருடைய எளிமைதான் நாட்டின் இத்தனை உயர் பதவிகளை அடைய காரணமாக இருந்திருக்க வேண்டும். எத்தனை உயரங்களைத் தொட்டபோதும், எளிமையில்  இருந்தும், அமைதியான பேச்சில் இருந்தும், சிறிதும் விலகாதவர் நிர்மலா சீதாராமன்.

 

நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன்தான் இந்திய நாட்டின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர்.  ஒரு நாட்டின் வளர்ச்சியையும்  வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும் இடத்தில் ஒரு பெண் இருப்பது  இதுவே முதல் முறை. வீட்டில் மட்டுமல்ல நாட்டிற்கான பட்ஜெட்டையும் எங்களால் உருவாக்க முடியும்  என்று பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்தவர் நிர்மலா சீதாராமன். மதுரையில் 1959 ஆம் ஆண்டு சாவித்ரி – நாராயணன் சீதாராமன் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். திருச்சியில் பட்டப்படிப்பை முடித்தார். ஜே.என்.யு.வில் பொருளாதாரத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். அதன் பின்னர் இந்திய- ஐரோப்பிய ஜவுளி  வர்த்தகம்  தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பைப் படித்தார். 

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் 

 

 1984-ல் எம்.ஃபில்., பட்டத்தைப் பெற்றபோதுதான் தனது வருங்கால கணவரான பரக்கல பிரபாகரைச்  சந்தித்தார். அவர் பாஜக ஆதரவாளராக இருந்த நிலையில் அவருடைய புகுந்த வீடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குடும்பமாக இருந்தது. அவருடைய மாமியார், காங்கிரஸ் எம். எல். ஏ. வாக இருந்தார். அவருடைய மாமனார் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார்.  நிர்மலா சீதாராமன் – பரக்கல பிரபாகர்  திருமணம் 1986 -ல் நடைபெற்றது. நிர்மலா சீதாராமனின் கணவர் முன்னாள் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம்  தொலைத்தொடர்புத் துறையில் ஆலோசகராக இருந்தார். திருமணம் ஆனதும் நிர்மலா சீதாராமன்  தம்பதி லண்டனில் குடியேறினர். அங்கே அவர் வீட்டு அலங்காரப் பொருட்கள் நிறுவனத்தின் பிரதிநிதியாக, விவசாயப் பொறியாளர்கள் சங்க பொருளாதார நிபுணரின் உதவியாளராக இருந்தார். அதன் பின்னர் சிறிது காலம் பிபிசி உலக செய்திப் பிரிவிலும் நிர்மலா சீதாராமன் பணியாற்றினார்.

 

ஐந்தாண்டு கால  லண்டன் வாழ்க்கைக்குப் பிறகு இந்தியா திரும்பிய நிர்மலா சீதாராமன், 1991 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். அப்போது தான்  தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைத்து. சுமார் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். அப்போதுதான் மத்திய அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜுடன்  நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதன் நீட்சியாக 2006 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.

 

பின்னர் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னேறினார். அதன் எதிரொலியாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு  உறுப்பினர் மற்றும் செய்தித் தொடர்பாளராக  உயர்ந்தார். மோடியின் தீவிர ஆதரவாளராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்  மோடியின் ஆதரவுக் குரலாக ஒலித்தார். பிரதமர் வேட்பாளராக   மோடியைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டினார். அதன் எதிரொலியாக குஜராத் தேர்தல் களத்தில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார் நிர்மலா சீதாராமன். 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக பாஜக  ஆட்சி அமைத்தது. அப்போது மோடி தலைமையில் அமைந்த ஆட்சியில் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரானார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. அதனால், அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இப்படியான தேர்வு என்பது  நிர்மலா சீதாராமன் மீது மோடி வைத்த நம்பிக்கையாகவே பார்க்கப்பட்டது. 

 

 அதிரடித் தாக்குதல்களை அரங்கேற்றியவர்

 

நிதி அமைச்சராக அருண் ஜெட்லி இருந்தபோது,  அதே துறையின் இணையமைச்சராக  நிர்மலா சீதாராமன் இருந்தார்.  பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராகப் பதவி ஏற்ற நிலையில், அந்தப் பதவி கூடுதலாக நிதி அமைச்சராக இருந்த,அருண் ஜெட்லியிடம்  தரப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக  விமர்சித்தன. இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார். இந்தியாவின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கும் உயர் பதவியில் இருந்த போதுதான், காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர் பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி தரும்  வகையில் பாகிஸ்தானில் அதிரடியாக நுழைந்து துல்லியத் தாக்குதலை நடத்தியது இந்திய ராணுவம். அதற்கான அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தவர் நிர்மலா சீதாராமன். இப்படிப்  பன்முகத் திறமை கொண்ட நிர்மலா சீதாராமன் முதலில் ஆந்திராவில் இருந்தும், பின்னர் கர்நாடகாவில் இருந்தும் மாநிலங்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டவர்  என்றாலும், தமிழக அரசியல் மீது அதிகக்  கவனம் அவருக்கு உண்டு. அதன் காரணமாகத் தமிழக அரசியலில் நிர்மலா சீதாராமன் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் நீட் தேர்வு குறித்துத் தமிழகத்துக்கு அவர் கொடுத்த வாக்குறுதி. அந்த வாக்குறுதி நடைமுறை ஆகவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனாலும், அந்த விமர்சனங்களையும் கேள்விகளையும் மிக  தைரியமாகக் கடந்தார். பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் யாரையும் அதிகம் விமர்சிக்காதவர் நிர்மலா சீதாராமன்.

 

இப்படிப் பரபரபப்பான அரசியல் களத்திலும் நிர்மலா சீதாராமன் வாழ்வை ரசிக்கத் தவறுவதில்லை. பயணம், மலை ஏறுதல், இசை கேட்பது, சமையல் போன்றவை  அவருக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. குடும்ப வாழ்வுக்கும், எளிமைக்கும் அதிக முக்கியத்துவம் தருபவர். குடும்பம் மற்றும் அலுவலகப் பணியிலும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கக் கூடியவர் நிர்மலா சீதாராமன். செய்தித்தாள்களை வாசித்து முடித்த பிறகே தமது  அலுவலகத்திற்குச் செல்லக் கூடியவர். அமைச்சக அலுவலகத்திற்கு வெளியிலேயே  கட்சிப்பணிகளை முடித்து விட வேண்டும் என்று நினைப்பவர். கட்சி அலுவல்களை ஒருபோதும்  அமைச்சக அலுவலகத்தில் வைத்துக்கொள்ளாதவர். 

 

முப்படைகளின் அதிகாரிகள் டெல்லியில் இருக்கும்பட்சத்தில்  பாதுகாப்பு அமைச்சராக  அவர்களைச் சந்திக்கத் தவறியதே இல்லை. அதேபோன்று இரவு 8 .30 மணி வரை அலுவலகத்தில் பணியாற்ற த் தவறுவதில்லை. அதற்குக் காரணம் அவருடன் பணியாற்றும் அலுவலர்களும் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர்.  மற்ற மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கட்சிக்கென்று கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அப்படி  ஒரு முறை கர்நாடகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்துவிட்டு அதிகாரிகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த போது, சாலையில் கூட்டத்தில் நின்றிருந்த பெண் நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது  காகிதம் ஒன்றைக்  கசக்கி எறிந்தார். இதை ஏதேச்சையாகக் கவனித்த நிர்மலா சீதாராமன், உடனடியாக கான்வாயயை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணிடம் போய் விசாரித்தார். அப்போது அந்தப் பெண் தனது வீடு இடிந்துவிட்டதாகவும் ,அது குறித்த மனுவைக் கொடுக்கலாம் என்று முயன்றபோது, அது முடியாமல் போனதால், அதனை வீசி எறிந்ததாகவும் கூறிவிட்டுக் கதறி அழுதார். அந்தப் பெண்ணைத் தேற்றிவிட்டு அந்தக் காகிதத்தை எடுத்து  அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு,பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணுக்கு வீடு கட்டித் தரும்படி அறிவுறுத்தினார். 

 

சாமர்த்தியமாக  உடைத்த ரபேல் விவகாரம்

 

இப்படிப் பல வகையிலும் திறம்படச் செயல்பட்டுவந்த நிர்மலா சீதாராமனுக்குத் தலைவலியாக அமைந்தது ரபேல் விவகாரம். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி  இருந்த போது, நாடாளுமன்றம் மட்டுமல்ல; போகும் இடங்களில் எல்லாம் ரபேல் குறித்த குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். பா.ஜ.க.விற்கு எதிராக எதை வைத்து அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்,அவர்களுக்கு லட்டு போல் கிடைத்தது ரபேல் விவகாரம். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ராகுல் காந்தி கடுமையாகக் குற்றச்சாட்டுகளை  அடுக்கி வந்தார். மக்களவைத் தேர்தலில்  ரபேல் ஆட்டத்தை முன்வைத்தே அரசியல் ஆட்டத்தை ஆடினார் ராகுல் காந்தி. அப்போது அவர் வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் நிர்மலா சீதாராமன். ராகுல் காந்தி இது தொடர்பாக, எப்படியான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தாலும் அதற்கான பதில்களை எடுத்து வைப்பார் நிர்மலா சீதாராமன். 

 

விமர்சனங்களைக் கடந்து பொருளாதாரச் சரிவை மீட்டவர்

 

விடாமல் துரத்திக்கொண்டிருந்த ரபேல் விவகாரத்தை நிர்மலா சீதாராமன் மத்திய அரசு சரியாக எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை அளித்தார். அவர் கூறியபடியே ரபேல் விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ரபேல் ஒப்பந்தம் அடுத்தக் கட்டத்தை எட்டியது. 2019 ஆம் ஆண்டு ரபேல் விமானம் வாங்கப்பட்டு மேலும் கூடுதல் விமானங்கள் வாங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த விவகாரத்தை வைத்து பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என்று கணக்கு போட்ட கட்சிகள் தலைகுனிந்தன. அதற்குக் காரணம் இந்த விவகாரத்தை மிகச் சரியாகக் கையாண்டு பிரதமர் மோடிக்குத் துணையாகச்  செயல்பட்டு இந்த விவகாரத்தைத் தகர்த்தெறிந்த நிர்மலா சீதாராமன்தான். அதன்  எதிரொலியாகப் பிரதமர்  மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் நிதி அமைச்சராகப்  பதவியேற்றார் நிர்மலா சீதாராமன்.  

 

1970-ல் இந்திரா காந்தி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்குப் பிறகு 17 -வது நாடாளுமன்றக் கூட்டத்தில் இரண்டாவது பெண் நிதி அமைச்சராக  நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்  செய்தார். 49 வருடத்திற்கு முன்பு பிரதமராக இருந்த  இருந்த இந்திரா காந்திதான் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராகவும் இருந்து,  நிதித்துறையையும்  தன்னிடம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிர்மலா சீதாராமன்தான், முதல் முழு நேர  நிதி அமைச்சர். இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் அனைவரும் பட்ஜெட் கோப்புகளை சூட்கேசில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், முதல் முறையாகத்  துணிப்பையில்  பட்ஜெட் கோப்புகளைக் கொண்டு வந்தது  வித்தியாசமாக இருந்தது. 

 

எட்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப. சிதம்பரம் எப்போதும் தனது பட்ஜெட் உரையில் திருக்குறளைக் கூறி தான் பட்ஜெட் தாக்கல் செய்வார். ஆனால், நிர்மலா சீதாராமன் பிசிராந்தையார் மற்றும் அறிவுடைநம்பி பாண்டியனைப் பற்றிக் கூறி,  யானை புக்க புலம் போல, தானும் உண்ணான், உலகமும் கெடுமே என்கிற புறநானூற்றுப் பாடலை வாசித்து  பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துபவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் ஒரு அரசன் எவ்வாறு வரி வசூலிக்க வேண்டும் என்பதையும் விளக்கும் பாடல் அது. அவர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் மிகவும் முத்தாயப்பானது 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையில்  இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று சூளுரைத்தார். இதனைப் பிரதமர்  மோடி  மற்றும் அமைச்சர்கள் உட்படப் பலரும்  வரவேற்றனர். ஆனால், நிலைமை தலைகீழனாது. கொரோனா காரணமாகப் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. கடுமையான பொருளாதார மந்த நிலையை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். எப்போதும் வாய் திறக்காத அவரே,  இந்தியப் பொருளாதாரச் சரிவு குறித்து ஆழமாகப் பேசினார். இப்படிப் பலரும் விமர்சித்துவந்த நிலையில், அதையெல்லாம்  கடந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்ட, மீட்டுகொண்டிருக்கிற பெருமைக்குரியவர் நீர்மலா சீதாராமன்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!