பெண் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், அப்படியான குற்றங்களை எந்த நிலையில் செய்கிறார்கள் என்பதை விரிவாக பேசுகிறார் உளவியல் நிபுணர் வந்தனா..
“பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் காலம் காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.இந்தக் குற்றங்கள் நடக்க காரணம் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டியுள்ளது. மூன்று காரணங்களால் இந்தக் குற்றங்கள் நடக்கின்றன. பிறப்பிலேயே உள்ள குறைபாடுகள் மற்றும் உளவியல் ரீதியாக உள்ள சிக்கல்கள், சமூகத்தின்மீதான பிம்பம் ஆகிய மூன்று காரணங்களால் இந்தக் குற்றங்கள் நடக்கின்றன. இப்படியான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று கூறலாம்.
ஒரு பெண் பாதிக்கப்படும்போது மட்டும் இதற்காக நிறைய விவாதங்களை நடத்துகிறோம். ஆனால் இதைத் தீர்ப்பதற்கான ஒரு வழியை நாம் காண்பதில்லை. இந்தக் குற்றங்களைத் தடுக்க சிறையில் மறு வாழ்வு மையங்கள் மற்றும் சீர்திருத்தப் பள்ளிகள் போன்றவற்றில் இது தொடர்பான செயல்பாடுகள் இருந்தாலும் இதுகுறித்த முழுமையான முன்னெடுப்புகள் இல்லை என்பதுதான் உண்மை. அண்மைக் காலமாக ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்து அவருடைய உடலை சிதைக்கின்ற நிலையை நாம் பார்க்கிறோம். இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் சாதாரண நபர்கள் என்று கூறிவிட்டு இதனைக் கடந்துவிட முடியாது.
இவர்கள் சாதாரண மனிதர்களை போன்றவர்கள் இல்லை. மனநோயால் (psychopathology) பாதிக்கப்பட்ட நபர்கள் இவர்கள். இப்படிப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இதைப் பேசுவதால் எந்தப் பயனும் விளையப்போவது இல்லை. மாறாக, இது போன்ற குற்றங்கள் மேலும் அதிகரிக்குமே தவிர, குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.அதோடு இது போன்ற சம்பவங்களை ஊடகங்களில் ஒளிபரப்பப்படுவதால் அதை ஒரு சிலரால் மட்டும் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு கெட்டதைக் கைவிடும் மனநிலைமை இருக்கும். ஆனால் ஒரு சிலர் அப்படியான மனநிலை இல்லாத நபர்களாக இருப்பார்கள். அவர்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்க்கின்ற போது இதுபோன்ற சம்பவத்தில் அவர்களும் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் ஊடகங்களும் இது போன்ற நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பக் கூடாது.
இந்தக் குற்றங்களைத் தடுக்க வேண்டுமென்றால் கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.குறிப்பாக, பள்ளிப் பருவத்திலேயே அவர்களுக்குப் பாலியல் கல்வி குறித்த தெளிவு ஏற்படுத்தினால் அது குறித்த முறையற்ற தேடுதலில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.அதேபோன்று பிள்ளைகள் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது அவர்களின் நடவடிக்கைகள் தொடங்கி விடுவதால் அம்மாவின் மன நிலை மற்றும் சூழல்களைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் வளர்ச்சி இருக்கிறது. அப்படிப்பட்ட பிள்ளைகளை வளர் இளம் பருவத்திலேயே சீர்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோன்று பள்ளிக்குச் செல்லும் ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகள் குறித்த புரிதலையும் மேன்மையையும் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. இவ்வாறு செய்தால் முற்றிலும் குற்றங்களை ஒழிக்க முடியும் என்று சொல்லமுடியாது. ஆனால் குறைக்க முடியும் என்பது உண்மை. இப்படி யான குற்றங்களை ஒழிக்க அரசாங்கமும் கொள்கை ரீதியாக சில புதிய திட்டங்களை, யோசனைகளை நடைமுறைபடுத்த வேண்டி யுள்ளது.”என்றார்.