சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் இதுகுறித்து கூறுகையில் : முதல்வர் வழிகாட்டுதலின்படி, உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளமும், கைபேசி செயலியும் (TN CONSUMER APP) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருமொழி (தமிழ், ஆங்கிலம்) மற்றும்மாற்றுத் திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஸ்கிரீன்ரீடர் அணுகல் வசதியுடன் இந்தஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், அனைத்து அமலாக்க அதிகாரிகளின் தொடர்புவிவரங்கள், உணவு ஆய்வகங்களின் முகவரி, அரசு உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் உணவு மாதிரி பகுப்பாய்வுக்கான கட்டண விவரம், கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் மீதான தடை உத்தரவு, துறை ரீதியான அறிவிப்புகள், நீதிமன்ற வழக்குகளின் உத்தரவு என உணவு பாதுகாப்பு துறை பற்றிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
மக்கள் எளிதாக கையாளும் வகையிலும், நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவும், உணவு பாதுகாப்பு துறை மூலம் பிரத்யேகமாக ‘தமிழ்நாடு உணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலி’ (TN Food safety Consumer App) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் (IOS) ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.