இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், நம்மில் பலரும் அதில் சிக்கி மீண்டு வருகிறோம். அவ்வாறு மீண்டு வருபவர்கள் அதன் தாக்கத்தால் சில பிரச்னைகளை இன்றும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஆண்கள் இதில் இருந்து எளிதில் மீண்டு வந்திருந்தாலும், பெண்கள் அதிலிருந்து மீளுவது சற்று கால தாமதமாகிறது என்று கூறுகின்றனர். அவ்வாறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருபவர்கள் என்ன செய்ய வேண்டும்?அவர்களுக்கான பிரச்னை என்ன? அதில் இருந்து முழுவதுமாக எவ்வாறு விடுபடலாம் என்று விரிவாகப் பேசியுள்ளார் மருத்துவர் ஜெய.அவரிடம் சில கேள்விகள்..
“கொரானாவில் இருந்து மீண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்குமா ?”
“தடுப்பூசிக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கோவிட் பாதிப்புக்கு உள்ளாகி மீண்டு வந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக உடல் சோர்வு , முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஆனால் மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவது, உடல் எடை அதிகரிப்பது முதலியவற்றிற்கு கோவிட் மட்டுமே ஒரு காரணமாக இருக்காது. உடல் எடை அதிகரிக்கும் நபர்கள் தான் உடற்பயிற்சி செய்யாததால் தான் எடை அதிகரித்தது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். குடும்பக்கட்டுப்பாடு செய்ததாலோ, கோவிட் வந்ததாலோ அல்லது வேறு சில காரணங்களால் தான் உடல் எடை கூடியது என்று கூறுவதைத் தவிர்க்க வேண்டும். கோவிட் பாதிப்பிற்குப் பின் விளைவுகள் இருப்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் தற்காலிகமானவையே .
“கொரோனாவில் இருந்து மீண்ட பெண்கள் எவ்வளவு காலத்திற்குப் பிறகு கர்ப்பம் தரிக்கலாம் ?”
“தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்கு எந்த விதமான குழப்ப மும் இன்றி கர்ப்பம் தரிக்க திட்டமிடலாம் . ஆனால் கணவரோ மனைவியோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருந்தால் , அவர்கள் கண்டிப்பாக ஒரு 2 மாத இடைவெளி எடுத்துக்கொள்வது நல்லது. ஆண்கள் கோவிட் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டு வந்துவிடுகின்றனர் . ஆனால் பெண்களைப் பொறுத்தவரை முழு வதுமாக கோவிட் தொற்றில் இருந்து மீண்ட பிறகே கர்ப்பம் தரிப்பது சிறந்தது. இது எதிலும் வரையறுக்கப்பட்ட விஷயம் இல்லை. ஆனால் உடல் சோர்வு , காய்ச்சல் போன்றவை முழுவதும் நீங்கி உடல் வலுப்பெற்றதும் பெண்கள் கர்ப்பம் தரிக்க திட்டமிடுதல் சிறந்தது . ஏன் என்றால் கர்ப்பகாலத்தில் 10 மாதம் ஏற்படும் உடல் மாற்றங்களைத் தாங்கும் அளவிற்கு ஆரம்பத்திலேயே உடல் வலிமையோடு இருக்க வேண்டியது அவசியம் .
“கர்ப்பிணி பெண்களை கொரோனா தாக்கினால் அது குழந்தையையும் பாதிக்குமா ?”
“உலகளவில் பல்லாயிரக் கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வழங்கப்படும் அதே மருந்துகள்தான் அவர்களுக்கும் வழங்கப் பட்டது . ஆனால் இதுவரை எந்த ஆய்விலும் கோவிட் தோற்றால் கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக முடிவுகள் வரவில்லை . ஆதலால் இந்தப்பெரும் தொற்றுக்குப் பயந்து எந்தக் கர்ப்பிணிப் பெண்களும் கருக்கலைப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லை . ஒருவேலை ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது கர்ப்பகாலத்தில் 3 ஆம் மாதம் மற்றும் 5 ஆம் மாதம் எடுக்கப்படும் பரிசோதனையில் தெரிந்துவிடும் . அதைப் பார்த்தபின் கருக்கலைப்பு குறித்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம் ஆனால் கோவிட் பாதிப்பு ஏற்பட்ட ஒரே காரணத்திற்காக கருக்கலைப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லை .”
“கொரோனாவில் இருந்து மீண்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் உடற்பயிற்சி செய்யலாமா ?”
“தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஒரு வாரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் , அதற்காக முழுவதுமாக வீட்டில் இருக்க வேண்டும் என்றில்லை , அன்றாட வேலைகளைச் செய்யலாம். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். இதில் கோவிட் தொற்றில் இருந்து மீண்டுவந்தவர்களாக இருந்தால் காய்ச்சல், உடல்வலி போன்ற பின் விளைவுகளில் இருந்து முழுவதுமாய் குணமான பின்பே உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.அவ்வாறு உடற்பயிற்சி அவசியம் என்றால் நடைப்பயிற்சி மேற்கொள்ள லாம். சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு மித மான நடைப்பயிற்சி மேற்கொண் டாலே போதுமானது. கொழுப்பு சத்து இல்லாத புரதசத்து அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.”
“கொரோனாவிலிருந்து மீண்ட பெண்கள் அசைவம் உண்ணலாமா?”
“அசைவ உணவுகளில் மீன் எடுத்துக் கொள்வது நல்லது. அதனால் உங்கள் உடல் எடை கூடாமல் நல்ல சத்துக்களும் கிடைக்கும் . உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்றால் பிற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும் . அதிலும் சமைக்கும் முறை மிகவும் முக்கியம். அதிக எண்ணெய் பயன்படுத்தி வறுவல் போன்று சமைக்காமல் இருத்தல் முக்கியம் . “
“தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வருவது ஏன் ?”
“சில தடுப்பூசிகள் நமக்கு 100 சதவீதம் பாதுகாப்பைக் கொடுக்கும். குறிப்பாக, பெரியம்மை போன்ற நோய்களுக்குரிய தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்த பெரியம்மை நோய் வராது . ஆனால் ஒரு சில தடுப்பூசிகள் போட்டுக்கொள்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு அந்த நோயால் பாதிப்பு இருக்காது.இதில் 20 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது . கோவிட் தடுப்பூசிகள் நமக்கு முழுமையான பாதுகாப்பைக் கொடுக்காது. ஆனால் கோவிட் தடுப்பூசிகளில் இரண்டு டோஸ் தடுப்புகளைப் போட்டுக்கொண்டவர்களில் இறப்பு சதவீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமானது.”
“போலியான தடுப்பூசிகள் போடப்படுவதாக வரும் செய்திகள் உண்மையா?”
“எந்த ஒரு பொருளுக்கும் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதன் போலி உருவாகிவிடும். அதனால் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். எங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்கிறோம் என்பது முக்கியம். முதலில் கோவிட் செயலியில் பதிவு செய்ய வேண்டும். அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நமக்கு குறுஞ்செய்தி வரவேண்டும். அதனால் அரசு மருத்துவமனை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் . இவ்வாறு செய்தால் போலி தடுப்பூசிகளிடமிருந்து தப்பலாம். அதுமட்டுமின்றி கோவிட் தடுப்பூசிகளில் போலி மிக மிகக் குறைவே .”
“பொது இடங்களில் போடப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?”
“தடுப்பூசியின் விளைவுகள் தெரியாத காலகட்டத்தில் பல வழிமுறைகளைக் கடைபிடித்தே தடுப்பூசி போடப்பட்டது . இப்பொழுது பல கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதால் இதில் பக்கபிளைவுகள் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இப்பொழுது பல பொது இடங்களிலும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன . மருந்து களினாலோ அல்லது தடுப்பூசிகளினாலோ அலர்ஜி ஏற்படும் நபர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மற்ற அனைவரும் தாராளமாகப் பொது இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பொது இடங்களில் தடுப்பூசி போடப்படும்போது கண்டிப்பாக ஒரு அவசர ஊர்தி நிறுத்தப்பட்டிருக்கும். அதனால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.”