சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் உள்நாட்டு படைப்பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்கள்ளது. இதனால் அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர். அங்குள்ள தமிழர்களை மீட்க கோரி , தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் தொடர்ந்து வருவதன் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உடனடியாக அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக்கோரியும், அவர்களை பாதுகாப்பாக தமிழகம் மீட்க கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரப்பட்டு உள்ளது.
மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது. தற்போது ஒன்றிய அரசின் ‘ஆபரேசன் காவிரி’ என்ற திட்டத்தின் மூலமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உதவி தேவைப்படுபவர்கள் 011-2419 3100, 9289516711 என்ற டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி மற்றும் செல்போன் எண்ணுக்கும், tnhouse@nic.in என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். 96000 23645, nrtchennai@gmail.com என்ற சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் செல்போன் எண் மற்றும் இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.