day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

விடுதலைக்கான எழுத்து! – தேன்மொழி தாஸ்

விடுதலைக்கான எழுத்து! – தேன்மொழி தாஸ்

தமிழின் முக்கியமான பெண் கவிஞர். அவர் திரைப்படப் பாடலாசிரியராகவும், திரைக்கதாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். தன்னைக் கவிஞராக அடையாளம் காண்பதில் மட்டுமே நிறைவு கொள்கிறார். வாழ்வில் பல போராட்டங்களைக் கண்ட பின்னும் கவிதையின் உயிர்த்துடிப்பைப் பற்றிக் கொண்டே இருப்பது மட்டுமே இவர் கண்ட உறுதி. கவிஞர் தேன்மொழி தாஸின் நேர்காணல்….

 

கவிதை எழுதுவதற்கான உந்துதல் எப்படி ஏற்படுகிறது?

இயற்கையிடமிருந்து ஏராளமாக எனக்குக் கிடைக்கிறது.

பிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும் போது உங்களுக்குள் என்ன விளைவு ஏற்படுகிறது?

எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் எவ்வளவு என்னை நானே தற்காத்துக் கொள்கிறேனோ அது வரை தான் எனது தனித்துவம் இருக்கும்.

“வயல்வெளிக் கொக்குகளின் கால்களில்

வானம் பன்மையடைகிறது”  

“நான் பனிக்குடத்தில் மூளை உருவாகும் காலத்தில் இருக்கிறேன்”

இத்தகைய வரிகளை நான் பிறருடைய கவிதைகளை வாசிப்பதால் எழுத முடிந்ததில்லை .

தற்கால கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமான கவிஞர் யார்? அவருடைய எந்த உத்தி பிடித்திருக்கிறது?

கவிதை சாதாரண மானதல்ல. யாருடைய உத்தி எனக்குப் பிடித்திருந்தது என்றால் மெளனமே பதிலாகும். ஆனால் தற்காலத்தில் பிடித்த கவிஞர்கள் என்றால் சிவசங்கர்.எஸ்.ஜெ, பாம்பாட்டி சித்தன், கவிதைக்காரன் இளங்கோ, திண்டுக்கல் தமிழ் பித்தன், இளங்கோ கிருஷ்ணன், மெளனன் யாத்ரிகா, யவனிகா ராம், நேசமித்ரன், என். டி ராஜ்குமார், சஹானா.

மொழிபெயர்ப்பதில் விருப்பம் இருக்கிறதா?

எனக்கு அந்நிய மொழி படைப்புகளை மட்டுமல்ல… வாசிப்பதில் கூட மிகுந்த சிரமம் உண்டு. எனது சிந்தனையின் அசுரப் பாய்ச்சல் அதற்கு மிகுந்த தடையாகவே இருக்கிறது.  

தாழ்த்தப்பட்ட உணர்வு நிலையைக் கவிதையாக்குவதால் அது தனித்த பிரிவாகப் பார்ப்பது சரியா?

கவிதையாக்குதல் எதுவாகவும் இருக்கலாம். இங்கே தாழ்த்தப்பட்ட உணர்வு நிலை என்ற சொல்லே வலி மிக்கது.. உலகில் நாம் வியக்கும் அத்தனை செயற்கையான செளந்தர்யங்களும் இயற்கையின் முன் வறுமை மிக்கவை.

போராட்ட மனநிலைதான் பெரும்பாலும் எழுத்துக்கு அடிப்படையாக இருக்கிறதா?

எழுத்துக்கு போராட்ட மனநிலை மட்டுமல்ல. பசி, பசியிலிருந்து விடுபடுதல், விடுதலைக்காக எழுத்தை விதைத்தல், தற்கொலையை மறைத்தல், தற்கொலை யிலிருந்து மீட்டெடுத்தல், கேள்விகளால் விஞ்ஞானிக்கும் வேராகுதல், பதில்களால் ஞானிக்கும் மேலாகுதல், எளிமையால் குழந்தைக்கும் கீழாகுதல், நற்சிந்தையால் சமூகத்திற்கு உப்பாகுதல், தீராத கலை வேட்கையால் இயற்கையோடு இயற்கையாகுதல் இவை தான் எழுத்திற்கு அடிப்படை.

பெண்களின் போராட்டம் எதைச் சார்ந்ததாக இப்போது இருக்கிறது?

பெண்கள் பெண்களாக வாழ்வதற்கான போராட்டமே மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது.

திரைப்படத்தில் பாடல் எழுதுவது கவிதை எழுதுவதற்கு நிகரானதா?

கட்டாயமாக இல்லை. கவிதைக்கு நிகர் நிலையில் கவிதையே இருக்கும்.  

கவிதைக்கான எல்லை எது? பாடலின் வரைமுறை எது?

கவிதைக்கு எல்லை வானமும் இல்லை.  பாடல் எல்லைகளுக்குள் கட்டுப்பட்டது.

திரைப்படப் பாடல்களில் கவிதை அம்சத்திற்கான அவசியம் இருக்கிறதா ?

பாடலுக்குள் கவிதை வரவேண்டும் என்றால் அது தேவையைப் பொறுத்தே நிகழும்.

திரைப்படப்பாடல்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது எது?

திரைப்படங்களே அடுத்த நிலைக்குச் செல்லவில்லை .

இசையின் தேவைகளை நிறைவு செய்வது மட்டுமே திரைப்படப் பாடலின் பணியாகிவிடுகிறதா?

இசையின் தேவை.. கதையின் தேவை அவ்வளவுதான்.. இதில் எழுத்தாளர்கள் தேவை என்ற ஒன்று இல்லை.

உங்களைக் கவிஞராக அறிவதில் விருப்பமா, திரைப்படப் பாடலாசிரியராக அறிவதில் நிறைவா?

கவிஞர் என அறியப்பட்ட பிறகே பாடலாசிரியர் ஆனேன். என்றென்றும் கவிஞர் என அறியப்படவே பிரியம் கொள்கிறேன்.

  தமிழ்க் கவிதைகளில் இப்போதைய குணாம்சமாக எதைப் பார்க்கிறீர்கள் ?

தடுக்கி விழுந்தால் இணையத்தில் பெருகும் தகவல்கள் எல்லாம் கவிதை ஆக்குகிறார்கள். கவிதை இதற்கு அப்பாற்பட்டது.

உங்கள் கவிதைகளின் குணாம்சங்கள் பாலின விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?

எழுத்துக்கென கோட்பாடுகளை வகுத்துக் கொண்டேன், எனது வாழ்வின் உறுதிகளே வார்த்தையாகும்.

பெண்ணியக் கோட்பாடு களை நடைமுறைச் செயல்பாடுகளாக அறிந் ததால் உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றமா?

பெண்ணியக் கோட் பாடுகளை, நடைமுறை செயல்பாடுகளாக மட்டுமல்ல, வாழ்வும் எழுத்தும் வேறு வேறு அல்ல என்பதற்கு எனது எழுத்துக்களே சாட்சி.

படைப்பின் கணம் என்பது இறப்பும் பிறப்பும் இணைந்ததாகவே தொடர்ந்து இயங்குகிறதா எப்போதும்?

படைப்பின் கணமென நான் ஏற்பது  அகத்தில் இறந்து புறத்தில் உயிர்த்தல். புறத்தால் இறந்து அகத்தில் உயிர்த்தல்.  

பெண் கவிதைகள் என்ற தனித்த பிரிவாகப் பார்க்கப்படுகிறாதா? அது அவசியமா?

பார்க்கப்படுகிறது. அவசியமானது..

“ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி

சஞ்சலம் தீர்க்கும் தவமே சக்தி

சாம்பலைப் பூசி மலைமிசை வாழும் சங்கரன் அன்புத் தழலே சக்தி “

எனப் பெண்மை போற்றினான் பாரதி.

சிவமாகத் தொழுதவள் காரைக்கால் அம்மையார்.

உங்கள் மொழியைப் புதுப்பிக்க என்ன செய்வீர்கள் ?

தொடர்ந்து பிரபஞ்சத்தைத் தியானித்து அறிந்து, எனது எழுத்திற்கான கோட்பாடுகளிலிருந்து தவறாமல் அதற்கென் தாய் மொழியைத் தொழுகையாகக் கொள்வேன்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!