வெகு எளிதில் கிடைக்கும் எதன் மீதும் நமக்கு பேரார்வம் இருப்பதில்லை. அந்த வரிசையில் தான் முருங்கைக்கீரையும் இருக்கிறது.
முருங்கை மரத்தின் இலை, பூ, காய் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. ” முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும்” என கிராமத்தில் பழமொழியாகக் கூறுவர். வாரத்தில் ஒருமுறையேனும் நமது உணவில் முருங்கைக்கீரையை சேர்த்துக்கொள்வது நல்லது.
இன்றைய நாகரீக உலகில் பல துரித உணவுகள் வந்துவிட்டது. வீட்டில் சமையல் செய்வதை பலர் நிறுத்திவிட்டார்கள். ஆர்டர் செய்தவுடன் உணவு வீடு தேடி வந்து விடுகிறது. ஆனால் அந்த உணவில் என்னென்ன கலந்து இருக்கிறது ? எப்படிப்பட்ட எண்ணெய் உபயோகிக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்குத்தெரிய வாய்ப்பில்லை.
அதிக கலோரி கொண்ட உணவுகளையே பெரும்பாலும் ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். இதனால் நமது உடல் எடை கூடுவது தான் மிச்சம். பல பெண்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப் படுகிறார்கள். “டயட்” என்ற உணவு கட்டுப்பாடு செய்வதால் பலருக்கு சத்துக்குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக ரத்தசோகை பாதிப்பில் பல பெண்கள் அவதிப்படுகின்றனர்.
ரத்தசோகை இருக்கும் பெண்ணால் தொடர்ச்சியாக எட்டு மணிநேரம் வேலை செய்யமுடிவதில்லை. உடல் சோர்வு, மயக்கம், எந்தவித வேலையிலும் நாட்டமின்மை ஏற்படுகிறது. தொடர்ச்சியாக ரத்த சோகையால் அவதிப்படும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படுகிறது . இப்படி தொடர் பிரச்சனையால் அவதியுறும் பெண்கள் புத்துணர்வோடு பணிகளைச் செய்ய வாரத்தில் 2 நாட்கள் முருங்கைக்கீரை சாப்பிடுவது நல்லது. இதனால் ஹீமோகுளோபின் அளவு ரத்தத்தில் அதிகரித்து ரத்தசோகை நோய் குணமாகும்.
குழந்தையின்மை பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகிறது . மேலும் கர்ப்பகோளாறுகள் நீங்குவதற்கும் சிறந்த மருந்தாக முருங்கைப்பூவும், முருங்கைக்கீரையும் இருக்கிறது. இப்படி அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பல மருந்தாகப் பயன்படுகிறது . இப்படி மருத்துவ குணம் கொண்ட உணவுகளைப் பற்றி நிறைய தெரிந்துக்கொள்வோம். மீண்டும் அடுத்தமாதம் சந்திக்கிறேன்.
டாக்டர்.J. சியாமளா
சித்த மருத்துவ நிபுணர்