தாய்மைப்பேறு என்பது பெண்களுக்குக் கிடைக்கும் உச்சகட்ட மரியாதையும் பெருமையும் ஆகும். இந்தக் கர்ப்ப காலத்தின்போது பெண்கள் முதல் மாதத்தில் இருந்து ஓன்பதாவது மாதம்வரை என்னென்ன கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். அந்த மாற்றங்களைச் சந்திப்பது இயல்பானவைதான். இதனை எண்ணி பயம் கொள்ளக்கூடாது. மாறாக ஒன்பது மாதங்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செய்தால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதுடன் சுகப்பிரசவமும் ஏற்படும்.
நம் முன்னோர்கள் எல்லாருக்குமே சுகப்பிரசவம் வீட்டிலேயேதான் நடந்தது. ஆனால், இடையில் ஏற்பட்ட அலோபதி மருத்துவத்தின் தாக்கத்தின் காரணமாகவும், மறந்துபோன பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாகவும் சிசேரியன் இன்று கட்டாயமாகிவிட்டது.
முதல் மூன்று மாதங்களுக்கு…
பொதுவாகப் பெண்களுக்கு 2200 கலோரி மதிப்புள்ள உணவு போதுமானது. கர்ப்ப காலத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வது அவசியம். அப்பொழுதுதான் வயிற்றிலிருக்கும் சேய்க்குக் கூடுதலான சக்தி கிடைக்கும். மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் மற்றும் ஏழாம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று நமது பண்டைய பாரம்பரிய மருத்துவம் கூறுகிறது. இந்தக் காலகட்டத்தில் கர்ப்பிணிகள் அதிக அளவு திரவ உணவுகளையும் பழங்களையும் எடுத்துக்கொள்ளும்போது கரு வளர்ச்சி நன்றாக இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவக் குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, பிரமி போன்ற மூலிகைகளுடன் தேன் மற்றும் நெய் சேர்த்துக் கலந்து கொடுக்க வேண்டும்.
இந்தச் சமயத்தில் சிசுவின் உடல் பகுதிகளான கைகள், கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சி நடைபெறும். அந்த நாட்களில் மருத்துவக் குணம் கொண்ட நெய்யை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவைத் தாயின் ரத்தத்தின் மூலம் எடுக்கிறது. எனவே, இருவரும் உண்ணக்கூடிய உணவு விருப்பப்பட்டு உண்ணக் கூடிய உணவாக இருக்க வேண்டும். அதற்குத்தான் அந்தச் சமயத்தில் அவர்கள் விரும்பும் பலகாரங்களைக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கும் மரபு உள்ளது.
வலியில்லாத பிரசவத்துக்கு
அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் மிகச்சிறந்த உணவாகும். வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்கும் தாயின் உடல் நலத்திற்கும் மிகச்சிறந்த உணவாக இருக்கும் சத்து நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காயைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
மருத்துவக் குணம் கொண்ட மூலிகைப் பொருள்களான அஸ்வகந்தா, சீந்தில் கொடி போன்றவற்றைப் பாலில் கலந்து குடித்தால் கருவின் தசைகள் பலமாவதோடு கருவிற்குச் சிறந்த போஷாக்கையும் கொடுக்கும். கொழுப்பு, உப்பு மற்றும் நீர் குறைந்த அரிசிக் கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் பிரசவ வலி குறையும். இத்துடன் துளசியும் சேர்த்து உட்கொள்ள பிரசவம் வலியில்லாமல் எளிதாகும்.
வீக்கம் வற்ற
கர்ப்ப காலத்தின்போது சிலருக்குக் கை, கால்களில் வீக்கம் வருவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி போன்றவற்றைச் சாப்பிடலாம். ஒரு டீஸ்பூன் சோம்பை எடுத்து நன்றாக வறுத்து, வெடிக்கும்போது தண்ணீர் விட்டுக் காய்ச்சிக் குடித்தால் கால் வீக்கம் குறையும்.
அதுபோல் சூடு தணிய வேண்டும் என்று நினைப்பவர்கள் சீரகத்தை வறுத்துத் தண்ணீர் விட்டு ஒன்றுக்கு அரை பங்காகக் குறுக்கிக் குடித்து வர அடி வயிற்று வலி குறையும்.
சுகப்பிரசவத்துக்கு…
மூன்றாம் மாதத் துவக்கம் முதல் பிரசவ காலம் வரை வெந்தயக் கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். ஐந்தாம் மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீரில் சிறிதளவு வெண்ணைய் கலந்து மதிய நேரத்தில் சாப்பிட்டால் நிச்சயமாகச் சுகப்பிரசவம் ஏற்படும்.
கர்ப்ப காலம் முதல் பிரசவ காலம் வரையில் சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்த முருங்கைக் கீரை சூப் வைத்துக் குடிப்பதின் மூலம் பிரசவம் சுலபமாகும்.
பிரசவ நாள் நெருங்கும் நேரத்தில் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். இதற்கு வெற்றிலை, ஓமம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.
சாதாரண வலி என்றால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். கர்ப்பிணிகள் ஏழாவது மாதத்தில் இருந்து கடைசி மூன்று மாதங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நம் பாரம்பரிய மருத்துவம் கூறுகிறது.
கர்ப்பிணிகள் மூன்று மாதத்திற்குப் பின்பு துளசி இலைகளைக் கொதிக்கவைத்து மூலிகைத் தேநீராக அருந்துவதன் மூலம் பிரசவம் எளிதாகும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மேற்கூறிய உணவு முறைகளைக் கடைபிடித்தால் நிச்சயமாக சுகப்பிரசவம் ஆக மாறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.