சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கேவுக்கு ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. 20 ஓவர்களில் முடிவில் சிஎஸ்கே 7 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அம்பதி ராயுடு 27 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
218 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் அதிரடி தொடக்கம் கொடுத்தார். 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசிய நிலையில் மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.