காபூல் : ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டில் பெண்கள் நடத்தி வந்த ஒரே வானொலியான ‘சடை பனோவன்’ (பெண்களின் குரல்) என்ற வானொலிக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த வானொலி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இது அந்நாட்டின் ஒரே பெண்கள் நடத்தும் வானொலியாக இருந்து வந்துள்ளது.
இது குறித்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத் துறையின் பிராந்திய இயக்குநர் மொயிசுதீன் அகமதி கூறியதாவது :- ”ரம்ஜான் மாதத்தில் இசை ஒலிபரப்புவதன் மூலம் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கைகளை இந்த வானொலி தொடர்ந்து மீறி வருகிறது. அதன் காரணமாகவே இந்த வானொலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கையை ஏற்பதாகவும், இனி இதுபோன்று நிகழாது என்றும் அந்த வானொலி உறுதி அளித்தால் தடை விலக்கிக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
ஆனால், வானொலியின் நிலைய மேலாளர் நஜியா சொரோஷ் இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்:- ”ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் விதிகளை நாங்கள் தொடர்ந்து மீறி வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. நாங்கள் எந்த வகையான இசையையும் ஒலிபரப்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.