புதுடெல்லி : தற்போது ‘ஹால்மார்க்’ தங்க நகைகளில், இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் (பி.ஐ.எஸ்) இலச்சினை, தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் 916 என்ற எண், நகையை ஆய்வு செய்து மதிப்பீடு அளிக்கும் மையத்தின் இலச்சினை, குறிப்பிட்ட கடையின் இலச்சினை ஆகிய 4 அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், தங்க நகைகளுக்கு என்று 6 இலக்க ‘ஹால்மார்க் தனித்த அடையாள எண்’ கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, ஹால்மார்க் நகைகளில் 3 அடையாளங்கள் இடம்பெற்றன. அதாவது பி.ஐ.எஸ். இலச்சினை, தரத்தை குறிக்கும் 916 எண், ஆறு இலக்க ‘ஆல்பாநியூமரிக்’ (எண்ணும் எழுத்தும் சேர்ந்தது) ஹால்மார்க் தனித்த அடையாள எண் ஆகியவை பொறிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து இன்று முதல் பி.ஐ.எஸ். இலச்சினை, தூய்மையைக் குறிக்கும் 916 எண்ணுடன், 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய தங்க நகைகள், தங்க கலைப்பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேவேளையில் மக்கள் ஏற்கனவே வாங்கியுள்ள, 4 இலச்சினைகளுடன் கூடிய பழைய ஹால்மார்க் நகைகள் செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.