தனது கணீர் குரலால் காண்போர் மத்தியில் செய்திகளைப் பதியவைக்கும் சுமித்ரா, தமிழ்மொழிதான் தன்னை வாழவைப்பதாகப் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார். தனியார் செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றும் சுமித்ரா, தான் இந்தத் துறைக்கு வந்தது எப்படி என்பது முதல் தனது பின்னணிவரை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
“எனக்குச் சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம். அப்பா, அம்மா இருவரும் அரசுப் பணியில் இருந்தவர்கள். இதனால், எனக்கும் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. முடித்துவிட்டு இந்து சமய அறநிலையத்துறையில் பணியில் சேருவதற்காக அதற்குரிய தேர்வுகளை எழுதினேன். எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றும் நான் நினைத்த பணிக்குச் செல்ல முடியவில்லை. காரணம் 45 பணியிடங்கள்தான் காலியாக இருந்தன.
பிறகு கடந்த 2008-ம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தேன். அரசுப் பணிக்குத் தயாராகிவந்ததால் தொடர்ந்து செய்திகளை அப்டேட் செய்துவந்தேன். இதனால், செய்தி வாசிப்புப் பணி எனக்குச் சிரமமாக இல்லை. பின்னர் பொதிகையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பும் கிடைத்தது. அப்போதுதான் 2009ஆம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவில் ஒப்பந்த அடிப்படையில் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தேன்.
பின்னர் 2011ஆம் ஆண்டு, தற்போது பணியாற்றும் தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகும் வாய்ப்புக் கிடைத்தது. இங்கு தான் இன்றுவரை எனது பயணம் தொடர்கிறது. எனது செய்தி அறிவை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள இங்கே வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து நேரலை, விவாத நிகழ்ச்சி, ஆன்மிக நிகழ்ச்சிகள் எனப் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக இருந்துவருகிறேன்.
என்னைப் பொறுத்தவரை எந்தவொரு செய்தியையும் மிகைப்படுத்திக் கூறக் கூடாது. தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பேட்டி காணும் வாய்ப்போ நேரில் காணும் வாய்ப்போ கிடைக்கவில்லை என்பதுதான் என் மனதில் இருக்கும் நெருடல். இது எனக்கு மட்டுமான ஆசையாக இருக்காது என நினைக்கிறேன். ஊடகத்தில் அதுவும் குறிப்பாகச் செய்தித் துறையில் பணியாற்றும் பலருக்கும் இதுபோன்ற ஏதாவது ஒரு விருப்பம் இருக்கும்.
செய்தி வாசிப்பதோடு மட்டும் எனது பணியை நான் முடித்துக்கொள்ள விரும்பவில்லை. அதையும் தாண்டி நிறைய எழுத வேண்டும் என ஆசைப்படுகிறேன். தற்போது 4 கதைகளை எழுதியுள்ளேன், எதிர்காலத்தில் இன்னும் அதனை அதிகப்படுத்துவேன். அதேபோல் உதவி ஆசிரியராக ஒரு செய்திக்கு வடிவம் கொடுப்பதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது.
இதைத்தவிர சமையலில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. என்னுடைய மகன்களுக்காக அவர்கள் விரும்பும் உணவுகளைச் சமைத்துப் பரிமாறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதேபோல் ஆன்மிகத்திலும் எனக்குச் சற்று ஈடுபாடு அதிகம். தமிழகத்தில் ஏதேனும் ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அந்த ஊரில் பிரசித்தி பெற்ற கோயிலுக்குச் சென்று வழிபடுவேன். ஜாதி, மதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு பார்ப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று.
செய்தி வாசிப்பாளராக இந்தத் துறைக்கு வந்து ஏறத்தாழ 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல தருணங்களில் மனம் வருந்ததக்க செய்திகளையும் படிக்க வேண்டிய சூழல் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள், கோர விபத்துகள் எனப் பல நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். இருப்பினும் அந்த இடத்தில் எனது தனிப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடமையைச் சரியாக நிறைவேற்றி வந்திருக்கிறேன்.
நான் மதுராந்தகம் அரசுப் பள்ளியில் தமிழ்வழியில்தான் படித்தேன். தமிழ்தான் இன்று எனக்கு வாழ்வு கொடுத்திருகிறது. இதைச் சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.’’