தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். தமிழ்நாடு வனப்பகுதியில் தாயை இழந்த யானைக்குட்டிக்கும் அதைவளர்த்தவர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்குவதாக இந்தப் படம் அமைந்தது. குனீத் மோங்கா தயாரித்த இந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தியாவில் தயாரான ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இதுதான் முதல் முறை.
இந்நிலையில், கான்சால்வ்ஸ் மற்றும் மோங்கா உள்ளிட்ட இந்தப் படக்குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி அவர்களை பாராட்டியதோடு, படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்து அவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திஎலிஃபன்ட் விஸ்பரர்ஸ் சர்வதேச அளவில் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இந்தியாவுக்கு அவர்கள் பெருமை தேடித் தந்துள்ளார்கள்” என பதிவிட்டுள்ளார்.