பசியால் வாடுகிற ஒருவனுக்கு மீன் பிடித்துத் தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது என்பதை உணர்த்துகிறது ‘நீலம்’ அமைப்பு. அதன் நிறுவனர்களில் ஒருவரான முத்தமிழ் கலைவிழி கடந்துவந்த பாதையே அதற்குச் சாட்சி. அடக்குமுறையைக் கண்டு அச்சப்படும் பெண்கள் மத்தியில் ஐ.நா. சபைவரை சென்று பேசியவர் முத்தமிழ். நிறம், இனம், மொழி போன்ற காரணங்களால் முடக்கப்பட்டோருக்கு ஒரு முன்னுதாரணம் இவர்.
சென்னை அயனவரத்தில் உள்ள தாகூர்நகரைச் சேர்ந்த இவர் சிறு வயதிலேயே தந்தையால் சாரணர் இயக்கத்தில் சேர்க்கப்பட்டார் . அங்கு இவர் புரிந்த செயல்பாட்டுக்காக 2005ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதை அப்துல்கலாமிடம் பெற்றார்.
தந்தை பணி ஓய்வு பெறவே அரசுப் பணியாளர் ஆணையம் நடத்திய தேர்வை எழுதித் தேர்ச்சிபெற்று ரயில்வே பணியில் அமர்ந்தார். குடும்பத்தினரின் வற்புறுத்தலால் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டுப் பணிக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. ரயில்வே வேலை தங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் என்று முத்தமிழ் கலைவிழி நம்பினார். ஆனால், அங்கே அவருக் குப் பாத்திரம் கழுவுதல், இடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்தல், தோட்ட வேலை போன்ற வேலைகள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன. குடும்ப வறுமையால் இவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டார். அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தவர், லயோலா கல்லூரியில் மாலை நேரப் படிப்பாக பி.எஸ்சி., சைக்காலஜி மற்றும் தொலைதூரக் கல்வியில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆகிய இரண்டையும் முடித்தார்.
பின்பு மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சர்வீசஸ் (TISS) நிறுவனத்தில் மேற்கல்வி கற்க வாய்ப்புக் கிடைக்க, முடிவெடுக்கத் தயங்கினார் முத்தமிழ். மும்பைக்குச் சென்றால் பெற்றோரின் ஆதரவு கிடைக்காது, இருக்கும் 5000 ரூபாய் வருவாயையும் குடும்பம் இழக்கும் என்று பல கேள்விகள் மனதுள் எழ, துணிந்து ஒரு முடிவினை எடுத்தார்.
தனது இருசக்கர வாகனத்தை விற்றுக் கிடைத்த ஐந்தாயிரம் ரூபாயுடன் படிப்பிற்காகத் துணிந்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி மும்பை சென்றார். தேர்வுகளில் வெற்றிபெற்று மொழி தெரியாத ஊரில் பல இன்னல்களைக் கடந்து TISS நிறுவனத்தின் 75 வருட வரலாற்றை மாற்றி எழுதினார். அதன் முதல் பெண் மாணவரவைத் தலைவராகத் தேர்தெடுக்கபட்டர் முத்தமிழ். அமெரிக்கா சென்று கறுப்பர் இனப் போராட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். பட்டம் பெறும் நாளும் நெருங்கியது.
வீட்டின் எதிர்ப்பை மீறி மும்பை வந்ததால் பல காலம் பெற்றோர் அவரிடம் பேசாது இருக்கவே தான் பட்டம் பெறும் நாளில் அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். சென்னைக்கு வந்து அவர்களை மும்பை அழைத்துச் சென்று தான் அனைத்திலும் முதலிடம் பிடித்ததைக் கண்டுகளிக்கச் செய்து தான் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போகாது என உணரவைத்தார்.
பின்பு அவருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்ததால் ஆஸ்திரேலியா சென்றார். அங்குள்ள சுரங்க நிறுவனத்தில் பணியாற்றிய பழங்குடி இன மக்களின் மேம்பாட்டிற்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் சவாலான அந்தப் பணியினை மனப்பூர்வமாக ஏற்று அவர்களில் ஒருத்தியாகப் பணி செய்தார். அவர்களது மொழியினையும் கற்றுக் கொண்டார். தன் ஊதியத்தில் வீட்டுக்கடன் முழுவதையும் அடைத்து, பெற்றோருக்காக வீடு ஒன்றையும் கட்டிக்கொடுத்தார் .
தன் மீது எறியப்பட்ட கற்களையே தன் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி இன்று இந்த உயரத்தை அடைந்து உள்ளார் முத்தமிழ் கலைவிழி. இவரும் சமூக அவலங்களையும் சாதிய பிரச்சினைகளையும் தான் இயக்கிய காலா, மெட்ராஸ் படங்கள் வாயிலாகவும் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் மூலமும் மக்களுக்கு எடுத்துக்காட்டிய இயக்குநர் பா.ரஞ்ஜித்தும் இணைந்து தொடங்கியதுதான் ‘நீலம்’ அமைப்பு.
நீலம் என்பது வண்ணம் மட்டுமல்ல, இது ஒரு உணர்வு; சமத்துவத்தை வெளிப்படுத்தும் மேன்மையான உணர்வு என்று அறிந்ததால்தான் முத்தமிழ் ‘நீலம்’ என்கிற பெயரில் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார்.
இந்தத் தொண்டு நிறுவனத்தில் தாழ்த்தப்பட்டோர் எனக் கருதப்படும் ஏழைக்குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், அவர்களிடையே உருவாகும் தாழ்வுமனப்பான்மையைத் தகர்த்தெறிந்து, கல்வியோடு மற்ற கலைகளையும் கற்றுக்கொடுக்கும் உன்னத பணியைச் செய்துவருகிறார்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள வியாசர்பாடி, அயனாவரம், கர்லப்பாக்கம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் தலித் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கலை மூலம் கற்பிப்பதைப் பல வழிகளில் செய்து கொடுக்கிறது நீலம். இவை தவிர்த்துச் சாதியப் பிரச்சினை, ஆணவக் கொலை தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தும் வேலைகளையும் செய்கிறது. மேலும் பழங்குடியினர், பெண்கள், தலித்துகள், மாற்றுப் பாலினத்தவர், சிறுபான்மையினத்தவர் போன்றோர் குறித்த புத்தகங்களுக்கான விமர்சன நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல; தன் வலிமையைத் தானே அறியாதவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களது வலிமை இன்னதென உணரவைத்து வாழ்வில் உயர உதவிபுரிகிறது நீலம்.