மதுரை: மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரை கோர்ட்டில் நடந்த கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் நிலை வரும். 3 மாவட்ட நீதிமன்றம் உள்பட 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட கல்லூரியை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக பதிவு செய்த 1000 இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை ரூ.7 லட்சமாக இருந்தது. அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.