சிநேகா பார்த்திபராஜா. ஜாதி, மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழ் வாங்கியவர். இதன் மூலம் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுக்க அறியப்பட்டவர். புரட்சிகர எண்ணம் கொண்ட குடும்பத்தில் பிறந்த சிநேகா பார்த்திபராஜா ஒரு வழக்கறிஞர். திருப்பத்தூரில் அவர் பணி புரிந்துவருகிறார். அவருடைய கணவர் பார்த்திபராஜா ஒரு தமிழ்ப் பேராசிரியராக இருக்கிறார். கணவரும் மனைவியும் இணைந்து நவீன நாடகங்கள் தயாரிப்பது, இயக்குவது, நடிப்பது என்று கலைச்சேவை செய்து வருகிறார்கள். பெண்களுக்கான அங்கீகாரம், அடையாளம், சாதி மறுப்பு போன்ற அம்சங்களுக்கு சிநேகா முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவருடனான மின்னஞ்சல் பேட்டி இது. இதில் தன் பன்முகத்தன்மையை சிநேகா காட்டியிருக்கிறார்.
கேள்வி : ஏன் சாதி மறுக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?
பதில் : தாய், தந்தை இரண்டு பேரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பெரும்பாலானோர், ஆணின் சாதியையோ, பெண்ணின் சாதியையோத்தான் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். குழந்தைகள் உருவான பிறகு ஏதோ ஒரு சாதியை அவர்கள் பிடித்துக்கொள்கிறார்கள். அதுவே சண்டைக்கும் காரணமாக ஆகிவிடுகிறது. அதை மறுக்க வேண்டும் என்றால், குழந்தைகளுக்கு சாதி இல்லை என்ற நிலை வர வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினார்கள். சாதி ஏன் இருக்கிறது என்று நாங்கள் புரிந்துகொண்டோம். சாதி, மதம் அற்றவள் என்ற சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அம்சம் நான் சிந்தித்து செய்த விஷயம். சாதியைக் கட்டிக் காப்பாற்றுகிற அரசே அப்படி ஒரு சான்றிதழ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
கேள்வி : உங்களைப் போல மற்றவர்கள் இது போன்ற சான்றிதழ் பெறவில்லையே!
என்னுடைய தங்கைகள், என்னுடைய மகள்கள், என் தங்கையின் மகன் ஆகியோருக்குத்தான் பள்ளியில் சாதி இல்லை என்று கொடுத்தோம். என் பெற்றோருக்கும் அவர்களின் பெற்றோர் சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தார்கள். அவர்கள் அதை எந்த இடத்திலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. என் கணவருக்கும் சாதித் சான்றிதழ் இருக்கிறது. அதை அவர் பயன்படுத்தவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகளுக்கும் சாதிச் சான்றிதழ் இருக்கிறது. அவர்களும் பயன்படுத்தவில்லை. நான் சாதி இல்லை என்ற சான்றிதழ் பெற்றது ஒரு அதிர்வைக் கொடுத்தது. அதனால் இது போன்ற விண்ணப்பங்கள் வந்தால் அதை ஊக்குவிக்க வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தல் தரப்படுகிறது என்று அறிகிறேன். கிராம நிர்வாக அலுவலர்களிடம் இது போன்ற விண்ணப்பங்கள் வரும்போதே தடுத்துவிடுங்கள் என்று வாய்வழி அறிவுறுத்தல் தரப்படுகிறதாம். எப்படி சாதி இல்லை என்று தரலாம், அதற்கு என்ன அடிப்படை இருக்கிறது, இதற்கு என்ன அரசு ஆணை இருக்கிறது என்றெல்லாம் கூறப்படுகிறதாம். அதனால் பல பேர் விண்ணப்பம் செய்தும் அவர்களால் வாங்க முடியவில்லை. ஊட்டியைச் சேர்ந்த ராஜகுரு, சுகதேவ், பகத்சிங் என்ற மூன்று சகோதரர்கள் இதே போன்று சாதி, மதம் அற்றவர் என்று பள்ளியில் குறிப்பிட்டு வந்தவர்கள். அவர்களில் ஒருவர் ராணுவத்தில் சேரப் போகிறார். இன்னொருவர் கல்லூரியில் படிக்கிறார். இன்னொருவர் பள்ளியில் படிக்கிறார். இவர்கள் மூன்று பேருக்குமே அது போன்ற சான்றிதழ் வாங்கிவிட்டார்கள். நான்கு பேருமே ஒரே முறையில் வாங்கினோம். எங்களுக்குப் பிறகு ஆத்தூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இது போன்ற சான்றிதழ் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் எம்பிசி சான்றிதழை சரண்டர் செய்துவிட்டு சாதியற்றவர் என்ற சான்றிதழை வாங்கியிருக்கிறார். ஹரியானாவைச் சேர்ந்த ரவி என்பவர், சாதி இல்லை, மதம் இல்லை, கடவுள் இல்லை என்று வாங்கியிருந்தார். ஆனால் கடவுள் இல்லை என்று சொல்வதற்கு இந்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி அந்தச் சான்றிதழை ரத்து செய்துவிட்டார்கள். சான்றிதழ் வழங்குவது தாசில்தாரின் தனி அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமலும் போகலாம். அவர்களை நாம் நிர்ப்பந்திக்க முடியாது. சமாதானம்தான் செய்ய முடியும்.
கேள்வி : ஜாதி மறுத்துவிட்டால் சமூக அடையாளம் கிடைத்துவிடுமா?
பதில் : சமூகத்தில் அனைவருக்கும் அடையாளம் என்ற ஒன்று இருக்கிறது. எனக்கு ஜாதியற்றவர் என்ற ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். சாதி, மதம் அற்றவர் என்ற ஒரு மிகப்பெரிய அடையாளம் இந்தியாவிலேயே, ஏன், உலகிலேயே முதன்முறையாக கிடைத்திருக்கிறது. எல்லா உலக நாடுகளுமே ஏதேனும் ஒரு மதம் சார்ந்த நாடாகவே இருக்கின்றன. அந்த மதத்தை சார்ந்து தான் அந்த நாட்டின் மக்களும் இருக்கிறார்கள். ஜாதியற்றவர் என்ற நிலை பெருக வேண்டும். உணர்வுகளோடு பேசக்கூடிய நிறைய அமைப்புகள், மாணவர்கள், திரைத்துறையினர், அரசியல் சார்ந்தவர்கள் என அனைவரும் ஒரு உத்வேகமாக இதை எடுத்துக் கொள்வதே இதற்குக் கிடைத்த அடையாளமாக நினைக்கிறேன். சான்றிதழ் வாங்கிவிட்டால் மட்டுமே ஜாதி மதம் அற்றவர் என அங்கீகரித்துவிட மாட்டார்கள். ஏனென்றால், சான்றிதழே இல்லை என்றாலும், ஜாதி என்னவென்று கண்டுபிடிப்பதற்கான ஆயிரம் வழிகள் இந்த சமூகத்தில் இருக்கின்றன
கேள்வி : படித்து மேலே வந்துவிட்டால் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறதா?
பதில் : மேலே வருவது என்பது, பொருளாதார ரீதியாகவும், கல்வித் தகுதி, சமூகம் எதிர்பார்க்கும் சில பதவிகள், அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. எல்லா நிலைகளிலும், எல்லா வயதிலும், எல்லா இடங்களிலும் பெண்களுக்கான மரியாதை, பாதுகாப்பு என்பது இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. உண்மையைச் சொன்னால், இது தொடக்க நிலையில் கூட இல்லை. கல்வி மட்டுமே ஒரு பெண்ணை உயர்த்திவிடுமா என்றால் இல்லை. பெரியார் கூறியபடி, படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் இரட்டை அடிமைகளாக இருக்கிறார்கள். வீட்டில் கணவனுக்கு பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். வேலையில் பெண்கள் முதலாளிக்கு அடிமையாக இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் என எல்லா நிலைகளிலுமே பெண்கள் மிக மிகக் குறைவு தான். பெண் சுதந்திரம் என்பதைத் தாண்டி பொருளாதார ரீதியாக, குடும்பத்தை நடத்துவதற்கான விஷயமாகக் கூட அந்த சுதந்திரம் பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது. பெண்களை அடிமைப்படுத்துவது, ஜாதியும், ஆணாதிக்கமும் தான். பார்ப்பனீயத்தின் இரு கண்களாகவே இது செயல்படுகிறது.
கேள்வி : உங்கள் வீட்டில் உங்களுக்கு கணவரிடமிருந்து மரியாதை கிடைக்கிறதா?
பதில் : கணவரிடத்தில் இருந்து பெண்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு, பாசம், கவனித்தல், பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தல், சுதந்திரம் அளித்தல் என நிறைய இருக்கின்றன. அடிப்படையில் ஒரு பெண், கணவரிடமிருந்து ஜனநாயகம், சுய மரியாதை ஆகியவற்றையே முதலில் எதிர்பார்க்க வேண்டும். இவற்றை நாங்கள், திருமணத்திலேயே உறுதிமொழியாக எடுத்துக் கொண்டோம். சராசரியான கணவன் – மனைவிக்குள்ளான திருமண வாழ்க்கை போல எங்களுடையது இல்லை என்பதை நான் பெருமையாக பதிவு செய்கிறேன். எங்களுக்குள் வரும் பிரச்சனைகள் மட்டுமின்றி, எந்த முடிவுகளாக இருந்தாலும், இருவருக்குமான ஜனநாயக ரீதியான முடிவுகளையே நாங்கள் எடுப்போம். பொருளாதார விஷயம், குழந்தைகள் தொடர்பான காரியங்கள், வீட்டு வேலை பங்கீடு என எல்லாவற்றிலுமே ஜனநாயகப்பூர்வ அணுகுமுறை ஒரு பழக்கமாகவே எங்களுக்குள் ஆகியிருக்கிறது. அதேபோல், சுய மரியாதை என்பதில் இருவருமே மிகத் தெளிவாக இருக்கிறோம். அதனால் என்னால் ஒரு வழக்கறிஞராக மட்டுமின்றி, பலருக்கு குடும்ப நல ஆலோசகராக தலையிட்டுப் பேசி, வழிகாட்ட முடிகிறது.
கேள்வி : விட்டுக் கொடுத்துத்தான் வாழ்கிறீர்களா?
பதில் : ஒரு பிரச்சனையை ஒரு நபர் பிரச்சனையாக அல்லாமல், கருத்துப் பிரச்சனையாகப் பார்க்கும்போது, விட்டுக் கொடுப்பது என்பது, ஒரு தனிப்பட்ட செயலாகவே இருக்காது. அது ஒரு வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். இது, பார்த்திபராஜா தனிப்பட்ட ஒருவராக தவறு செய்துவிட்டார், அல்லது சினேகா இப்படி செய்துவிட்டார் என்ற கோணத்தில் நாங்கள் அதைப் பார்ப்பதில்லை. அதை லாஜிக்காக, ஏன் இந்த தவறு நடக்கிறது என்று ஒரு பகுப்பாய்வு செய்து பார்க்கும் பழக்கும் எங்களுக்கு இருக்கிறது. எனவே, தனிப்பட்ட விதத்தில் இந்த விஷயத்தில் யார் அதிகம் விட்டுக் கொடுப்பார்கள் என்றெல்லாம் இல்லை.
கேள்வி : சாதியால் பாதிக்கப்படுவது யார்?
பதில் : சாதியால் பலனடையக் கூடியவர்கள் தவிர அனைவரும் மற்ற அனைவரும் பாதிக்கப்படக் கூடியவர்கள் தான். தான் உயர்ந்த சாதி என்ற கர்வத்தோடு, தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று இருப்பவர்களைத் தவிர மற்ற அனைவருமே பாதிக்கப்பட்டக் கூடியவர்கள் தான். இந்த நவீன காலக்கட்டத்தில், செல்வங்களில் புரளக்கூடிய, கார்ப்பரேட்டுகள் வைசியர்களாகவும், அரசு அதிகாரங்களைத் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய இடத்தில் இருப்பவர்கள் சத்ரியர்களாகவும், உயர் இடங்களில் (கொள்கைகளை வகுப்பது, அரசியலில் முடிவுகளை எடுப்பதில் இருந்து, பொருளாதாரத்தை முடிவு செய்யும் வரை) எல்லாவற்றையும் தனக்குக் கீழ் கொண்டு வரும் ஒரு ஏகபோக சக்தியாக இருக்கக் கூடியவர்கள் பிராமணர்களாகவும், கை கோர்த்துக் கொண்ட ஒரு நிலையில் இருக்கிறார்கள். பஞ்சமர்கள் எனப்படும் எஸ்சி, எஸ்டி சமுதாயத்தினர் பிரம்மனுக்குப் பிறக்கவில்லை என்றும், விலங்குகளுக்குப் பிறந்தவர்களாகவும் குறிப்பிடப்படுகிறார்கள். இன்னும் அதற்கும் கீழே ஒரு பிரிவினர் இருக்கிறார்கள், அவர்கள் தான் பெண்கள். சாதியம் என்ற கருத்தியலால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
கேள்வி : சாதி ஒழிய களத்தில் நீங்கள் பணி புரிகிறீர்களா?
பதில் : நிச்சயம் நான் களத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். தமிழர்களை ஒன்றிணைந்து நமக்கான ஒரு இறையாண்மையுள்ள ஒரு அரசு அமைவது தான் சாதி ஒழிய தீர்வாக இருக்க முடியும். நாம், நமக்கு மேல் இருக்கும் டெல்லியின் ஆதிக்கத்தில் இருந்து நமக்கு இறையாண்மையுள்ள அரசு கிடைக்கும் வரை பெரிய போராட்டம் தான் செய்ய வேண்டியிருக்கும். கிராமங்களில் விழிப்புணர்வு செய்வதில் இருந்து, ஒரு அரசியல் ரீதியான, சித்தாந்த அடிப்படையிலான இயங்குதல் வரை பல விஷயங்களை நான் செய்து வருகிறேன்.
கேள்வி : அரசியல் பங்களிப்பு பெண்களுக்கு அவசியமா?
பதில் : இந்த உலகின் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்கள், அரசியல் பங்களிப்பு மட்டுமல்ல; என்னெல்லாம் இருக்கிறதோ, எல்லாவற்றிலுமே சமமான பங்களிப்பு என்பது மிக அவசியமான ஒன்று. என்னைப் பொறுத்தவரைக்கும் பெண்களுக்கான பங்களிப்பு, சரி பாதியாக, 50க்கு 50 என்ற நிலை அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் வர வேண்டும்.
கேள்வி : நீங்கள் அரசியல் கட்சியில் சேர்வீர்களா?
பதில் : தமிழர்களுக்கான இறையாண்மையுள்ள அரசை நிறுவக்கூடிய அரசியலை, சித்தாந்தத்தை வைத்திருக்கும் அமைப்பு எதுவாயினும் அந்த அமைப்போடு சேர்ந்து நான் பணியாற்றுவேன். இப்போது பணியாற்றிக் கொண்டு தான் இருக்கின்றேன். இப்போது இருக்கும் கட்சிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
கேள்வி : பெண்களுக்கு சம ஊதியம் கிடைக்க போராடி இருக்கிறீர்களா?
பதில் : பெண்களுக்கு சம ஊதியம் கிடைக்க மட்டுமல்ல; எந்த அரசியல் வழியில் இது சாத்தியமாகுமோ அந்த அரசியல் வழியை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நான் தொடர்ந்து இருக்கிறேன். பெண்களுக்கான எல்லா உரிமைகள், சுதந்திரம், சம ஊதியம், வேலைவாய்ப்பு, சுய மரியாதை, விடுதலை, பெற்றுத் தருவதற்கான இயக்கங்களில் நான் பங்கெடுக்கிறேன்.
கேள்வி : நாடகங்கள் மூலம் நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?
பதில் : கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்று சொல்வார்கள். மக்களுக்காகத்தான் கலை என்ற வடிவத்தையே நான் நம்புகிறேன். ஆனால், அரசியல் சார்ந்த நாடகங்களுக்கான பணிகளில் ஈடுபடும்போது, அது விழிப்புணர்வு நாடகமாகவோ, அரசியலைக் கொண்டு போய் சேர்க்கக்கூடிய ஒரு நாடகமாகவோ, பிரச்சார நாடகமாகவோ செய்வதுண்டு. நவீன நாடகத்தைப் பொறுத்தவரை, நாடகங்கள் எப்போதும் மக்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். மாற்று நாடக இயக்கம், நாடகசாலை என்பதை எனது கணவர் செய்து வருகிறார். மாற்று நாடக இயக்கம் என்பது கல்லூரியுடன் சேர்ந்த இயக்கம். நாடகம் என்பது குறிப்பிட்ட ஒரு நபரை பக்குவப்படுத்தி செதுக்க முடியும் என்பதில் அதீத நம்பிக்கை வைத்திருக்கக்கூடியவர்கள் நாங்கள். தமிழகத்தில் எல்லோராலும் பேசப்படக்கூடிய ஒரு நாடக விழாவை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி முடித்துள்ளோம்.
கேள்வி : நவீன நாடகங்கள் புரிவதில் சிரமம் இருக்கிறதே?
பதில் : சில புரியாத நாடகங்கள் நடத்தப்படும்போது, வாவ்.. அருமை என்று என்று கூறி, அந்த நவீன கலையைப் பார்த்து, ஒரு ஆச்சரிய வாக்கியமாக சொல்வோரும் இருக்கிறார்கள். நாடகம், கலை என்பது மக்களுக்கானதாகவே இருக்க வேண்டும் என்ற மிக உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். இத்தனை ஆண்டுகளில் சுமார் 30, 35 நாடகங்களுக்கு மேல் நாங்கள் அரங்கேற்றியிருக்கிறோம். புரியாத ஒரு நாடகத்தைக்கூட நாங்கள் இதுவரை செய்ததில்லை.
கேள்வி : கிராமங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கு எது தடையாக இருக்கிறது?
பதில் : அரசு அடிப்படையாக ஏற்படுத்தித் தர வேண்டிய சூழல், வாய்ப்பு போன்றவை கிராமப்புறங்களில் நிறைவு செய்யப்படவில்லை. நூலகம், கல்வி நிலையங்களில் கழிப்பறை, பாதுகாப்பு, ஆசிரியர், கட்டடம், உணவு ஆகியவற்றில் குறைகள் இருக்கின்றன. கிராமங்களில் கழிவறை, பேருந்து வசதி இல்லை என்பதற்காக பெண்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்வதை நிறுத்தும் பெற்றோரும் உண்டு. இந்தியாவில் உள்ள 75 சதவீத கிராமங்களில் இதுபோன்ற வசதிகளை அரசு ஏற்படுத்தித் தராதது, கல்வியில் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது. கிராமப்புறங்களில் பெண்கள் முன்னேற்றத்திற்கு மதமும், சாதியும் கூட தடையாகவே உள்ளது. பெண்களை திருமணத்திற்குத் தயார் செய்யும் ஒரு பொருளாக அங்கு வைத்திருக்கிறார்கள்.
கேள்வி : ஆண் மேலாண்மைக்கு பெண்கள் துணை போவது ஏன்?
பதில் : ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணிடத்தில் இருந்து பிறப்பது கிடையாது. ஒரு சித்தாந்தத்தில் இருந்து பிறப்பது. பொதுவாக பார்த்தால், ஆணாதிக்க சிந்தனை என்பது ஆண் மூளையில் உதித்த விஷயமாக இருக்கலாம். சித்தாந்த அடிப்படையில் பார்த்தால் இது ஆண்களின் சித்தாந்தம் கிடையாது. இது ஒரு பார்ப்பனீய சித்தாந்தம். பெண்களை இரண்டாம் பட்சமாக, அடிமையாக, ஒருத்தருக்குக் கீழ் ஒருத்தர் என பார்ப்பது இது. நமது நாட்டில் 1.25 லட்சம் சாதிகள் இருக்கின்றனவாம். பெண்ணடிமை சிந்தனைகளை மனுதர்மத்தின் வழியில் பட்டியலிட்டால், அதைப் படித்து முடிக்க 100 நாட்களுக்கு மேல் ஆகும். தாய்வழிச் சமூகமாக இருந்து உடைமைச் சமூகமாக மாறி, உடைமை வர்க்கத்தில் பெண்களை உடமைகளாக மாற்றிய காலம் தொட்டு, இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி பிரச்சனைகள் இருக்கின்றன. சில பெண்ணியவாதிகளே மிக மோசமான ஆணாதிக்கக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு சொற்பிரயோகத்தில் கூட அதை நாம் காணலாம். எடுத்துக்காட்டாக கற்பழிப்பு என்று சொல்வது.
கேள்வி : குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள்?
பதில் : குழந்தைகள் அனைவருக்கும், அந்தந்த வயதுக்கு ஏற்றவாறு சொல்லிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். மனிதநேயம், உறவுகள், மனிதர்களை மதிப்பது, அனைவரும் சமம், உழைப்பு, நேர்மை ஆகிய விஷயங்களை சொல்லிக் கொடுத்தல் அவசியம். பல பள்ளிகளில் சுமார் 15 ஆண்டுகளாக 10 வயது முதல் 15 வயது வரை இருக்கும் அனைத்துக் குழந்தைகளோடும் தொடர்ந்து உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றேன். ஒரு சமூகமே நம் பொறுப்பில் இருக்கிறது என்று நினைக்கக்கூடிய குழந்தைகள், நிச்சயமாக அவர்களின் பெற்றோருக்குப் பொறுப்புள்ளவர்களாக, கல்விக்கும், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை நான் நம்புகிறேன். குழந்தைகளுடன் முழுவதுமாக நேரத்தை செலவிட வேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருக்கின்றேன்.
கேள்வி: சட்டங்கள், நீதி எல்லாம் ஆண்களுக்குச் சாதகமாக இருக்கிறதா இல்லையா?
பதில் : சட்டம் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் உருவாக்குகிறார்கள். அது ஆண்டான் அடிமை சமூகமாக இருந்தால், ஆண்டான் தான் சட்டத்தை உருவாக்கியிருப்பார்கள். ஒரு பண்ணை உடைமை, நிலச்சுவான்தார் இருக்கும் சமூகமாக இருந்தால், நிலச்சுவான்தார்கள் தான் சட்டத்தை உருவாக்குவார்கள். முதலாளித்துவ சமூகமாக இருந்தால், முதலாளிகளுக்குப் பாதுகாப்பான சட்டங்களையே உருவாக்குவார்கள். நிச்சயமாக தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டமாக அது இருக்காது. சட்டங்களும், நீதிமன்றங்களும் ஆண்களுக்கானதாகவோ, உயர்ந்த சாதியினருக்காகவோ அல்லது பெரிய முதலாளிகளுக்கானதாகவோ தான் இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் என எல்லா அரங்கங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதியாக எப்போது அதிகாரம் வருகின்றதோ, அப்போது தான் அவர்களுக்கான சட்டம் இருக்க முடியும்.
கேள்வி : நன்றி சிநேகா.
பதில் : நன்றி பல.