வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ரஷியா, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில்:- அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்ததன்பேரில் உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர்க்கருவிகளை அமெரிக்கா வழங்க உள்ளது. உக்ரைனின் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அதற்கு ஆதரவளிக்க 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து வந்துள்ளதற்காக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.