பரபரப்பான மனித வாழ்க்கையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் யோகா எண்ணற்ற உதவி புரிந்து வருகிறது. முறையாக யோகாசனங்கள் கற்று அதனை நாள்தவறாமல் செய்துவரும் பலரும் மருத்துவமனை செலவின்றி ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருவதைக்
காணலாம். இப்படிப் பல்வேறு பெருமைகளையும், மேன்மைகளையும் உடைய யோகாவில் ஏ டூ இசட் கற்று ஆயிரக்கணக்கானோருக் குப் பயிற்றுவித்து
வருகிறார் ஊர்மிளா. பொறியியல் பட்டதாரியான இவர் மென்பொறியாளராகத் தனது பணியைத் தொடங்கியிருக்கிறார். அப்போது அவரது சீனியர்கள் பலரும் மனசோர்வடைந்த நிலையில் இருந்ததைக் கண்ட ஊர்மிளா, அது பற்றி அவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் இன்று யோகா ஆசிரியராக ஊர்மிளாவைக் கொண்டு வந்துள்ளது. ஐ.டி.துறையில் டீம் லீடரால் கொடுக்கப்படும் பணி அழுத்தங்களால் ஒருவித சோர்வான நிலைக்குத் தனத சக ஊழியர்களும் தள்ளப்பட்டதால் யோகாமீது நாட்டம் கொள்ளத் தொடங்கிய ஊர்மிளா அதனை விளையாட்டாகச் செய்து பார்க்கத் தொடங்கியுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலாகவே அவருக்கு மனப்புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது யோகா. இதனால் தனது எதிர்காலத்தை ஒரு யோகா பயிற்றுநராகக் கழிக்க வேண்டும் என எண்ணிய ஊர்மிளா முறைப்படி யோகாவின் அனைத்துக் கலைகளையும் கற்றறிந்தார். தற்போது பெங்களூருவில் உள்ள வேமனா கல்லூரியில் யோகா இயக்குநராகப் பணியாற்றி வரும் ஊர்மிளா, யோகாவின் நன்மைகள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். மேலும், யோகா தொடர்பான அனைத்துப் போட்டிகளிலும் முதல் பரிசையும் வென்று வருகிறார். இதுமட்டுமின்றி, யோகாவில் முனைவர் பட்டமும் பெற்றுள்ள ஊர்மிளா இரண்டு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். சேலத்தைப் பூர்வீகமாக கொண்ட ஊர்மிளா படித்தது தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். அதன் பின்னர் வளாக நேர்காணலில் தேர்வாகி சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் சில
ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இப்போது முழு நேர யோகா ஆசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவரது கணவர் பன்னீர்செல்வம் இதயசிகிச்சை நிபுணராக இருக்கிறார். எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் யோகா பயிற்சிப் பள்ளி தொடங்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ள ஊர்மிளா, இப்போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். மேலும், யோகா குறித்து கிராமப்புற மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசுடன் இணைந்து செயலாற்றும் திட்டத்திலும் இருக்கிறார்.