திருவொற்றியூர்: சென்னையில் மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக உள்ளன. இதனால் வரும் சில மாதங்களில் வட சென்னை பகுதி மக்கள் மெரினா கடற்கரையில் உள்ளதை போன்று இனி காசிமேடு கடற்கரையில் பொழுதை கழிக்கலாம். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையின் 3-வது மாஸ்டர் பிளானுக்காக சி.எம்.டி.ஏ.ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் காசிமேடு- எர்ணாவூர் பாரதி நகர் இடையே புதிய கடற்கரையை உருவாக்குவதற்கான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய கடற்கரையை உருவாக்குவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) மூத்த அதிகாரிகள் காசிமேடு பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இதில் புதிய கடற்கரை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து காசிமேடு பகுதி மக்கள் கூறும்போது, காசிமேட்டில் புதிய கடற்கரை திட்டத்தால் வடசென்னையின் முகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். எனினும் முழு பகுதியையும் கடற்கரையாக உருவாக்க முடியாத நிலை உள்ளது. எனவே அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றனர். இந்த பகுதியில் கடல் ஆழமாக உள்ளது. கடல் அரிப்பை தடுக்க கல் போடப்பட்டு உள்ளது.மேலும் திருவொற்றியூர் டோல்கேட் முதல் எர்ணாவூர் பாரதியார் நகர் வரை கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவும் உள்ளது. எனவே முழுவதையும் கடற்கரையாக கொண்டு வர முடியாது. இதேபோல் திருவொற்றியூர் மஸ்தான்கோவில் அருகே சூறை மீன்பிடி துறைமுகமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.